ஏப்ரல் 27 அன்று அருளாளர் கார்லோ அகுதீஸுக்கு புனிதர் பட்டம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று அருளாளர் கார்லோ அகுதீஸ் புனிதராக உயர்த்தப்பட இருக்கின்றார் என்றும், ஆகஸ்ட் 3 அன்று அருளாளர் ஜார்ஜோ ஃபிரசாத்தி புனிதராக உயர்த்தப்பட இருக்கின்றார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 23 சனிக்கிழமை அருளாளார்களாக உயர்த்தப்பட்ட அருள்பணியாளர் Cayetano Clausellas Ballvé மற்றும் பொது நிலையினரான Antonio Tort Reixachs பற்றியும் எடுத்துரைத்து வாழ்த்தினார்.
தன்னோடு மூவேளை செப உரை வழங்கும் இடத்தில் இருந்த இரு கொரிய இளையோர்கள் 2027 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற உள்ள 39ஆம் ஆண்டு உலக இளையோர் நாளுக்கான சிலுவையைப் பெற்றுக்கொண்டனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அதனை அவர்களிடம் ஒப்படைத்த போர்த்துக்கல் மக்களுக்காகவும் நன்றி தெரிவித்தார்.
நவம்பர் 25 திங்கள்கிழமை தேசிய நாளைக் கொண்டாடும் மியான்மாரை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயக நிலைக்காகப் போராடும் மக்கள், குறிப்பாக போரினால் பாதிக்கப்படும் மக்கள் அனைவரோடும் தனது உடனிருப்பை வெளிப்படுத்தினார்.
ஆயுதங்களை அமைதிப்படுத்தி, நீடித்த அமைதியை, உறுதிப்படுத்தக்கூடிய நேர்மையான உரையாடல்களுக்கான வாய்ப்புக்களைத் திறக்க வேண்டும் என்று ஒவ்வொரு தரப்பினருக்கும் இதயப்பூர்வமாக வேண்டுகோள்விடுப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.
போரினால் துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், லெபனோன், சூடான் மக்களுக்காக செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் அனைவரையும் வாழ்த்தி தனது மூவேளை செப உரையினைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்