ஒற்றுமையைக் கொண்டுவரும் திறன் கொண்ட அமைதிக்கான வேட்கை
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமைதிக்கான வேட்கை, மனித இதயத்தில் வேரூன்றி வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டுவரும் திறன் கொண்டது என்பதற்கான தெளிவான அறிகுறியாக இளையோர் பிரதிநிதிகள் இருக்கின்றனர் என்றும் முக்கியமான பணியினை செய்தல், அமைதிக்கான பாதையைக் கண்டறிதல், உரையாடல், எதிர்நோக்கு கொண்டிருத்தல் போன்றவை முக்கியமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 25 திங்கள் கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் பன்னாட்டு அமைதி சங்கத்தின் மண்டல உறுப்பினர்கள் ஏறக்குறைய 46 இளையோரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டு அமைதிச் சங்கத்தின் பிரதிநிதிகளாக பல்வேறு பின்னணிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது என்றும் கூறினார்.
ஆரோக்கியமான மகிழ்ச்சி மிகவும் முக்கியமானது, நல்லவற்றைக் காண நமக்கு உதவும் அந்த மகிழ்ச்சியை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், முக்கியமான பணியில் இளையோரின் பங்கு, உரையாடல், எதிர்நோக்கை இழக்காதிருத்தல் என்னும் மூன்று தலைப்பில் தனது கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
முதலாவது முக்கியமான பணியினைச் செய்தல்
முக்கியமான பணியினைச் செய்ய இலக்கு, உற்சாகம், நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் தேவை என்றும், இத்தகைய இளையோர் சிறந்த உலகம் நமக்கு சாத்தியமானது அமைதி சாத்தியமானது என்பதை எடுத்துரைக்கின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், அமைதிக்கான பாதைகளைக் கண்டறிவதில் இளையோர் பிறருக்கு உதவலாம் என்றும், முன்தீர்மானங்களை விட்டுவிடுதல், கடந்த கால காயங்களை மறத்தல், மன்னிப்பதற்கான சூழல் போன்றவற்றை அப்பாதைகளாக இளைஞர்கள் கண்டறியவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
இளைஞர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள், கருத்தியல்களால் நிரப்பப்பட்ட இளைஞர்கள் தங்களின் எண்ணங்களையும் நல்லது செய்வதற்கான விருப்பத்தையும் இழந்துவிடுகின்றனர் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த கால காயங்கள் தவறான எண்ணங்கள் போன்றவை ஒருபோதும் நம்மை நிலையான அமைதிக்கு இட்டுச்செல்லாது மாறாக மோதல், போர், வன்முறை, பிரிவினைக்கே நம்மை இட்டுச்செல்லும் என்பதை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இரண்டாவது உரையாடலில் ஈடுபடுதல்
உரையாடலில் ஈடுபடுதல் ஒன்றே அமைதிக்கான ஒரே வழி சிறந்த வழி என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்றும் இதன்வழியாக அமைதியின் கைவினைஞர்களாக நாம் மாற முடியும் என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், அருகிருத்தல், வெளிப்படுத்துதல். செவிமடுத்தல், பார்த்தல், அறிந்து கொள்ளுதல், முயற்சித்தல், இணைப்பின் புள்ளிகளைக் கண்டறிதல் என்பனவற்றை உரையாடல் வழியாக நாம் கண்டறிகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.
மூன்றாவது எதிர்நோக்கை இழக்காதிருத்தல்
எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்பதற்கேற்ப நாம் நம்பிக்கை கொண்டவர்களாக நல்லதை எதிர்நோக்கி வாழ வேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், போரினால் ஏற்படும் விளைவுகள் நமது எதிர்நோக்கு வீணாணது என்ற எண்ணத்தைக் கொடுத்தாலும் நம்பிக்கையை உயிர்த்துடிப்புள்ளதாக நாம் வைத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
நாம் அனைவரும் ஒரே மனிதக் குடும்பத்தின் அங்கத்தினர் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொண்டு, நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள், ஒப்புரவு, நல்லிணக்கம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எப்பொழுதும் நமது நேரத்தையும் முயற்சியையும் மதிப்புடையதாக மாற்றும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்