வத்திக்கான் வளாகம் அக்டோபர் மாதம் நடைபெற்ற புனிதர் பட்ட திருப்பலியின்போது வத்திக்கான் வளாகம் அக்டோபர் மாதம் நடைபெற்ற புனிதர் பட்ட திருப்பலியின்போது 

புனிதர்களின் வாழ்வு நற்பண்பு மதிக்கப்பட்டு, போற்றப்பட வேண்டும்

திருஅவை நாள்காட்டியில் ஒரு புதிய நாளை சேர்ப்பதற்காக அல்ல மாறாக, அந்தந்த தலத்திருஅவைகளில் புனித வாழ்வு வாழ்ந்தவர்களின் வாழ்வும் அவர்கள் விட்டுச்சென்ற நற்பண்பும் மதிக்கப்பட்டு, போற்றப்பட வேண்டும் என்பதற்காகவே நவம்பர் 9 புனித வாழ்வு வாழ்ந்தவர்கள் நினைவுகூரப்படுகின்றார்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

வருகின்ற யூபிலி 2025ஆம் ஆண்டு முதல் நவம்பர் 9 தூய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவன்று ஒவ்வொரு தலத்திருஅவையும் புனிதர்களை மட்டுமன்றி அருளாளர்கள், இறைஊழியர்கள், வணக்கத்திற்குரியவர்கள், அனைவரையும் நினைவுகூர வேண்டும் என்று கடிதம் ஒன்றின் வழியாக எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு புனிதர்கள் மற்றும் மறைசாட்சியாளர்களுக்கென தனிப்பட்ட நினைவு நாள் திருஅவை வழிபாட்டு நாள்காட்டியில் இருந்தாலும் திருஅவையைச் சார்ந்த புனிதர்களைப்போலவே, அருளாளர்கள், இறைஊழியர்கள், வணக்கத்திற்குரியவர்கள், அனைவரின் புனித வாழ்வு நினைவுகூரப்பட வேண்டும் என்று கடிதம் ஒன்றின் வழியாக எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை நாள்காட்டியில் ஒரு புதிய நாளை சேர்ப்பதற்காக அல்ல மாறாக, அந்தந்த தலத்திருஅவைகளில் புனித வாழ்வு வாழ்ந்தவர்களின் வாழ்வும் அவர்கள் விட்டுச்சென்ற நற்பண்பும் மதிக்கப்பட்டு, போற்றப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

புனிதத்துவம் என்பது மனித முயற்சியின் பலனாக இருப்பதை விட, கடவுளின் செயலுக்கு இடமளிக்கிறது என்றும், ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைப் பயணத்தில் கிறிஸ்தவ நற்பண்புகள், சான்று வாழ்வு, நம்பிக்கை மற்றும் பிறரன்புப் பணிகளுக்கு சான்றாக இருப்பவர்களை சந்திக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"கிறிஸ்துவை நம்பும் அனைவரும், எந்த நிலை அல்லது தரத்தில் இருந்தாலும், கிறிஸ்தவ வாழ்க்கையின் முழுமைக்கும், முழுமையான பிறரன்புப் பணிக்கும் அழைக்கப்படுகிறார்கள்" என்றும், தூய ஆவியினாலே நம் இதயங்களில் பொழியப்பட்ட” கடவுளின் அன்பை ஏற்றுக்கொள்ள அனைவரும் அழைக்கப்படுகிறார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்பிக்கை பிறரன்புப் பணிகள் வழியாக தங்களது வாழ்வைப் பிறரின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்தவர்கள், இறையரசைப் பரப்புவதற்காக தங்களை அர்ப்பணித்த ஆண்கள் மற்றும் பெண்கள், இயேசுவை ஆர்வத்துடன் பின்பற்றிய இளைஞர்கள், மறைப்பணி வாயிலாக கடவுளின் வரங்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த மறைப்பணியாளர்கள், நற்செய்தி அறிவிப்பிற்காக தங்களைக் கையளித்த கிறிஸ்துவின் மணவாட்டிகள் ஆகிய அனைவரும் கிறிஸ்துவின் உயிருள்ள உருவங்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவுக்காக இரத்தத்தை சிந்தியவர்கள், கிறிஸ்தவ வாழ்க்கையின் எடுத்துக்காட்டுகளாகவும்,  நமக்காகப் பரிந்து பேசுபவர்களாகவும் மாறிய மறைசாட்சிகள், அருளாளர்கள், புனிதர்கள் போன்றோரின் முன்மாதிரிகையான வாழ்க்கையால் கவரப்பட நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும், புனிதத்துவ நிலைக்கான புனிதர் பட்ட படிநிலைகள் தொடர்ந்து நடைபெறுவது வானத்தின் விண்மீன்கள் போல அவர்கள் சுடர்விடுவதை எடுத்துரைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2024, 14:56