பார்படோஸ் பிரதமரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நவம்பர் 14, வியாழன், இன்று காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பார்படோஸ் பிரதமர் Mia Amor Mottley அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாகம் கூறியுள்ளது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் Mia Amor Mottley அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் துணைச் செயலர் பேரருள்திரு Mirosław Wachowski அவர்களையும் சந்தித்து உரையாடினார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பின்போது பார்படோஸ் மற்றும் திருப்பீடத்திற்கு இடையேயான நல்லுறவு குறித்து திருப்தி தெரிவிக்கப்பட்டது என்று கூறும் அவ்வறிக்கை, நமது பொதுவான இல்லமாகிய இப்பூமி மற்றும் விளைவுகள் போன்ற ஆர்வமுள்ள பல தலைப்புகள் குறித்தும், காலநிலை மாற்றம், நாடு மற்றும் மாநிலங்களின் தற்போதைய சமூக-அரசியல் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் உரைக்கிறது.
பார்படோஸ் மக்களின் பொது நலனை மேம்படுத்துவதில் மீண்டும் உறுதியளிக்கப்பட்ட நிலையில் இந்தச் சந்திப்பு நிறைவடைந்தது என்றும் மேலும் கூறுகிறது அவ்வறிக்கை.
பார்படோஸ் நாடு பற்றி
பார்படோஸ் (Barbados) என்பது அமெரிக்கக் கண்டத்தில் கரிபியன் பிரதேசத்தில், மேற்கிந்தியத் தீவுகளின் சிறிய அண்டிலிசில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது கரிபியன் தீவுகளில் மிகவும் கிழக்கே அமைந்துள்ளது. இத்தீவின் மொத்த மக்கள் தொகை 287,010 ஆகும். இவர்களில் பெரும்பான்மையானோர் ஆப்பிரிக்க வம்சாவழியினர் ஆவர்.
1966 நவம்பர் 30 இல், பார்படோஸ் ஐக்கிய அரசின் இரண்டாம் எலிசபெத்தை அரசியாக ஏற்றுக் கொண்டு, பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது. 2021 அக்டோபரில், பார்படோசின் முதலாவது குடியரசுத் தலைவராக சான்டிரா மேசன் அறிவிக்கப்பட்டார். 2021 நவம்பர் 30 இல் பார்படோசு ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டு, நாட்டுத் தலைவர் பதவி எலிசபெத் மகாராணியிடம் இருந்து சாண்டிரா மேசனுக்கு வழங்கப்பட்டது. (நன்றி: தமிழ் விக்கிப் பீடியா)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்