பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

குடும்பம்தான் கல்விக்கான பிறப்பிடமாக அமைந்துள்ளது!

நாம் ஒன்றாகக் காட்டக்கூடிய அமைதிக்கான அர்ப்பணிப்பு, உலகத்தின் பார்வையிலும், எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்கால சந்ததியினருக்கும் நம்மை நம்பகத்தன்மை உடையவர்களாக மாற்றும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உண்மையில், நேர்மையுணர்வும் மதச் சுதந்திரமும் மனித உரிமைகள் எனும் முழு கட்டிடத்தின் மூலைக் கல்லாக அமைந்துள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான திருப்பீடத்துறை மற்றும் மதங்களுக்கிடையேயான உரையாடல் மற்றும் கலாச்சாரம் அமைப்பிற்கிடையே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இடம்பெறவிருக்கும் 12-வது கலந்தாய்வுக் கூட்டத்தின் பங்கேற்பார்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

வாழ்க்கையின் தொட்டிலாக அமைந்துள்ள குடும்பம்தான் தொடக்க காலத்தில் இருந்தே கல்விக்கான முதன்மையான இடமாக அமைந்துள்ளது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, குடும்பத்தில் தான் மற்றவர்களுக்கு செவிசாய்க்கவும், அவர்களை அங்கீகரிக்கவும், மதிக்கவும், அவர்களுக்கு உதவவும், ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழவும் கற்றுக்கொள்கிறோம் என்று உரைத்தார்.

நமது வெவ்வேறு சமய மரபுகளின் பொதுவான அம்சம் இளைஞர்களின் கல்விக்கு வயதுமுதிர்ந்தோர் செய்யும் பங்களிப்பு ஆகும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அவர்களின் வாழ்க்கைச் சான்றால் இயல்பாக அமைந்த அவர்களின் மதப்பற்று, இளைஞர்களின் வளர்ச்சிக்கு விலைமதிப்பற்றதாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

கல்வித்தளத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் இருவருக்கும் உள்ள பொதுவான ஒரு கல்வி சவால் என்பது, வளர்ந்து வரும், சிக்கலான திருமணங்களால், வழிபாட்டு முறையின் வேறுபாடுகளை உள்ளடக்கியதாக உள்ளது என்று தெரிவித்த திருத்தந்தை, இத்தகைய குடும்ப அமைப்புகள் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான சிறப்புரிமை பெற்ற இடமாக இருப்பதைப் பார்ப்பது எளிது என்றும் கூறினார்.

சில சமூகங்களில் நம்பிக்கை மற்றும் மத நடைமுறை பலவீனமடைவது குடும்பத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், சரியான திசையில் செல்லாத மற்றும் மாறிவரும் இந்த உலகில் குடும்பம் எத்தனை பெரிய சவால்களைச் சந்தித்து வருகின்றது என்பதையும் நாம் அறிவோம் என்று கூறிய திருத்தந்தை,  இதன் விளைவாக, அதன் கல்விப் பணியை சிறப்பாக நிறைவேற்ற, குடும்பத்திற்கு அரசு, பள்ளி, அதன் சொந்த மதச் சமூகம் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட அனைவரின் முழு ஆதரவும் தேவை என்றும் விளக்கினார்.

இறுதியாக, இளைய தலைமுறையினரின் கல்வியானது கடவுளைத் தேடுவதில் உடன்பிறந்த உறவின் வழியாக நடைபெறுகிறது என்றும், இந்தத் தேடலில், ஒவ்வொரு நபர், ஒவ்வொரு சமூகம் மற்றும் ஒவ்வொரு நபரின் மனித மாண்பு மற்றும் உரிமைகளுக்காகப் பேசுவதிலும் உழைப்பதிலும் நாம் ஒருபோதும் சோர்வடையக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

நமது உலகம் வெறுப்பு, விரோதம், போர்கள் மற்றும் அணுசக்தி மோதலின் அச்சுறுத்தலால் பிரிக்கப்பட்டு பிளவுபட்டுள்ளது என்று எடுத்துக்கூறிய திருத்தந்தை, இந்தச் சூழ்நிலையானது, அமைதியை ஏற்படுத்தும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக உரையாடல், நல்லிணக்கம், அமைதி, பாதுகாப்பு மற்றும் அனைத்து மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக இறைவேண்டல் செய்யவும், பணியாற்றவும் நம்மைத் தூண்டுகிறது என்றும் தெரிவித்தார்.

நாம் ஒன்றாகக் காட்டக்கூடிய அமைதிக்கான அர்ப்பணிப்பு, உலகத்தின் பார்வையிலும், எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்கால சந்ததியினருக்கும் நம்மை நம்பகத்தன்மை உடையவர்களாக மாற்றும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2024, 14:47