இப்புவியைப் பாதுக்காக்கும் பொறுப்பை கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ளார்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மனித குலத்தின் நலன் மற்றும் நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியின்மீது கவனம் செலுத்த அனைத்துலகச் சமூகம் அவர்களின் சொந்த விருப்பங்களைக் கடந்து செயல்படத் தயாராக இருக்கின்றது என்பதை காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 29-வது மாநாடு நிரூபிக்கும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை
நவம்பர் 14, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள முதல் குறுஞ்செய்தியில் இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புவியைப் பாதுக்காக்கும் கடமையையும் பொறுப்பையும் கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 11 முதல் 22 வரை அஸர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 29வது மாநாட்டில் உலகத் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். மேலும் பிரேசிலில் 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் 30-வது மாநாட்டிற்கு முன்னதாக பல முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உள்ளது.
பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது பெருமைக்குரியது
மேலும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உதவுவது எப்போதும் பெருமைக்குரிய ஒரு செயல், ஏனென்றால் விண்ணரசு அவர்களுக்குரியது (மத் 5:3) என்றும், ஒவ்வொரு முறையும் நாம் பாதிக்கப்படக்கூடிய நபரை அணுகி நமது உதவியை அவருக்கு வழங்கும்போது, அது நமக்கு கிறிஸ்துவின் திருஉடலைத் தொடுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைத்துள்ளது என்றும், தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்