அறிஞர்கள் அறிவைத் தேடக் கூடியவர்களாக இருக்க வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இன்றைய பல்கலைக்கழகங்கள், குறைந்த அதிகாரப் படிநிலை, அதிக நிகழ்வுகளைக் கொண்டதாகவும், அவற்றிலுள்ள ஒவ்வொருவரும் அறிவைத் தேடக் கூடியவர்களாகவும், வரலாற்றின் காயங்களைத் தொடக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 5, இச்செவ்வாயன்று, உரோமையிலுள்ள இயேசு சபையினரின் கிரகோரியன் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதன் பேராசியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கிய உரையில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
திருத்தந்தை தனது உரையில், 16-ஆம் நூற்றாண்டின் உரோமையின் மையத்தில் ஒரு இயேசு சபையாளரின் வீட்டின் கதவில் தொங்கவிடப்பட்ட அடையாளத்தை, அதாவது, இது ஒரு நாள் உரோமன் கல்லூரியாகவும் பின்னர் கிரகோரியன் பல்கலைக்கழகமாகவும் மாறும் என்றதொரு அடையாளத்தைப் பிரதிபலித்தார்.
இந்த அடையாளம் என்பது, இலக்கணம், மனிதநேயம் மற்றும் கிறிஸ்தவக் கோட்பாடுகளின் பள்ளி என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய இரண்டு பாடங்களைக் குறித்துச் சுட்டிக்காட்டினார்.
முதல் பாடம், சமய அறிவியலை மனிதநேயத்துடன் கலப்பது என்றும், இது இயேசு சபையினர் வழங்கிய பாடங்களின் கலவையிலிருந்து வருகிறது என்றும் உரைத்த திருத்தந்தை, இன்று, இது மத அறிவியலை மனிதமயமாக்குவதற்கும், மனிதனில் உள்ள இரக்கத்தின் தீப்பொறியைப் பற்றவைத்து மீண்டும் அதனை உயிர்ப்பிப்பதற்கும் ஒரு அழைப்பாக அமைகிறது என்று தெரிவித்தார்.
இரண்டாவது பாடம், பாடங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்பதிலிருந்து பெறலாம் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்தப் பெருந்தன்மைதான் கடவுளின் வியப்புக்குரிய காரியங்களுக்கு நம் மனங்களைத் திறக்கிறது, அதிகார சீர்கேடு இல்லாமல் கல்வி கற்பிக்கிறது, வளர்ச்சியில் மகிழ்ச்சியடைகிறது மற்றும் கற்பனையை வளர்க்கிறது என்றும் கூறினார்.
கத்தோலிக்கக் கல்வியில் மனத்தாழ்மையின் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நீண்ட காலமாக, புனித அறிவியல்கள் மற்ற அனைவரையும் இழிவாகப் பார்த்தது, நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே விளங்கிய எதிரான மனநிலை ஆகிய அணுகுமுறைகள் பல்வேறு தவறுகள் ஏற்பட வழிவகுத்தது என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்