வாழ்க்கை, நம்பிக்கை மற்றும் ஞானத்தின் ஒரே ஆதாரம் கடவுள் மட்டுமே!

கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியன்று இரஷ்யா உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கிய நிலையில், நவம்பர் 19 இச்செவ்வாய்க்கிழமையுடன் 1,000 நாள்கள் நிறைவடையும் வேளை, அம்மக்களுக்கு தனது நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தையாகிய நான் உச்சரித்து இறைவேண்டல் செய்யும் "அமைதி" என்ற வார்த்தை உக்ரைனின் வீடுகள், குடும்பங்கள் மற்றும் தெருக்களில் ஒரு நாள் மீண்டும் எதிரொலிக்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் திருத்தந்தை

கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியன்று இரஷ்யா உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய நிலையில், நவம்பர் 19 இச்செவ்வாய்க்கிழமையுடன் 1,000 நாள்கள் நிறைவடையும் வேளை, துயருறும் உக்ரேனிய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை தனது நெருக்கத்தையும் செபங்களையும் தெரிவிப்பதாக கடிதம் ஒன்றில் உரைத்துள்ளார் திருத்தந்தை.

உக்ரைனுக்கான திருப்பீடத்தூதர் பேராயர் விஸ்வால்தாஸ் குல்போகாஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், உக்ரேன் மக்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதைத் தான் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஒவ்வொரு நாளும் அங்கு நிகழ்ந்து வரும் குண்டுவெடிப்புகளில் இருந்து அவர்களின் உயிரைக் காக்கவோ, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவோ, காயமடைந்தவர்களைக் குணப்படுத்தவோ, குழந்தைகளை வீட்டுக்குத் திரும்பக் கொண்டு வரவோ, கைதிகளை விடுவிக்கவோ, நீதியையும் அமைதியையும் மீட்டெடுக்கவோ எந்த மனித வார்த்தைகளாலும் முடியாது என்பதையும் தான் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள், மற்றும் பயங்கரமான சூழ்நிலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை நினைவுகூரும் வகையில் உக்ரைன் மக்கள் ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு ஒரு நிமிட தேசிய அமைதியை அனுசரிப்பதைத் தான் நினைவு கூர்வதாகவும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

 “விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்” (காண்க. திபா 121:2) என்ற திருப்பாடலை இந்தத் துன்புறும் மக்களை நினைவில்கொண்டு எழுதுவதாகக் கூறியுள்ள திருத்தந்தை,  இறைவேண்டலில் ஏற்படும் ஒன்றிப்பு இருண்ட காலங்களிலும் இறைவனின் வலிமை வாய்ந்த உதவியை பெற்றுத்தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2024, 15:09