ஒரு நபரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இறைவன் புனித யோசேப்பு கலாசான்ஸை இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் கல்விக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தூண்டினார் என்றும், பல நூற்றாண்டுகளாக, நான்கு கண்டங்கள் வரை பரவியுள்ள அவரது பணியை நீங்கள் தொடர்ந்து ஆற்றிவருகிறீர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
நவம்பர் 28, வியாழன் இன்று, கலாசன்சான் (Calasanzan Family) எனப்படும் துறவு சபையினரை அதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவர்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாக தான் கருதும் அவர்கள் மூலத்தின் இரண்டு அம்சங்களை வலியுறுத்த விரும்புவதாகக் கூறினார்
இறைப் பராமரிப்புக்குத் துணிவுடன் கூடிய பணிவு
வசதியான குடும்பத்தில் பிறந்த புனித யோசேப்பு கலாசான் அவர்கள் திருஅவைசார் பணிகளுக்காக உரோமை வந்து தெருவோரச் சிறாரின் நல்வாழ்விற்காகத் தன்னை அர்ப்பணிக்கத் தயங்கவில்லை என்பதையும், இது பிற்காலத்தில் பற்றுணர்வுமிகு பள்ளிகள் தோன்றக் காரணமாகின என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
அவரின் இந்தச் செயல் மிகவும் அழகாக இருக்கிறது, குறிப்பாக நம் நாட்களில் பல புதிய ஏழ்மைகளுக்கு முகங்கொடுத்து, அச்சங்களையும் தயக்கங்களையும் கடந்து, அதிகமாகக் கணக்கிடாமல், அதே வெளிப்படைத்தன்மையையும் தயார்நிலையையும், அவர்களின் விருப்பங்களில் வெளிப்படுத்த அவர்களையும் அழைக்க விரும்புவதாகக் கூறினார் திருத்தந்தை.
ஏழைகளின் தேவைகளுக்குப் பதிலளிப்பதற்காக, கடந்த காலத்தில் நடந்தவற்றிலிருந்து வேறுபட்ட பாதைகளில், திட்டங்களைத் திருத்துவதற்கும், எதிர்பார்ப்புகளின் அளவை மாற்றுவதற்கும் கூட அவர்கள் அச்சம்கொள்ள வேண்டாம் என்று உரைத்த திருத்தந்தை, இதில்தான் அவர்களின் அடிப்படைத்தன்மைகள் உள்ளன என்றும், அவற்றிற்கு உண்மையாக இருப்பதன் வழியாக அவர்களின் தனிவரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
ஒரு நபரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் அக்கறை காட்டுவது
இரண்டாவதாக ஒரு நபரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மனம், இதயம் மற்றும் கைகளின் செயல்கள் எவ்வாறு ஒன்றித்திருக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
உணர்வுகள், அறிவு, உறவு, தனித்துவம் ஆகியவற்றில் துண்டு துண்டான திசையில் இளையோரை மேலும் மேலும் தள்ளும் இவ்வுலகில், அவர்கள் தங்களுடனும் மற்றவர்களுடனும் ஒன்றிப்பை ஏற்படுத்த இந்த வகையான தொகுப்பை உருவாக்க உதவுவது இன்று மிகவும் அவசரமானது என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
ஒருங்கிணைந்த கல்வி முறை என்பது கடவுள் அவர்களிடம் ஒப்படைத்த ஒரு மிக முக்கியமான 'தனிவரம்கொண்ட திறமை' என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இதன் வழியாக நீங்கள் அவர்கள் திறன்களில் சிறந்து விளங்க அதை அனைவரின் நலனுக்காகவும் பயன்படுத்தலாம் என்றும் அவர்களுக்கு வழிகாட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்