குழந்தைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஐரோப்பாவில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவையில் பாலியல் முறைகேடுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த மாநாட்டிற்குக் கூடியிருக்கும் அனைவரையும் தான் வாழ்த்துவதாகவும், தலத்திருஅவையில் உள்ள குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பது முக்கிய பணிக்காக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 13 முதல் 15 வரை உரோமையில் இடம்பெற்று வரும் ஐரோப்பிய கத்தோலிக்கத் தலத்திருஅவையில் பாலியல் முறைகேடுகளிலிருந்து குழந்தைகளையும் வயதுமுதிர்ந்தோரையும் பாதுகாப்பது தொடர்பான கருத்தரங்கம் ஒன்றின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை, இந்தக் காரணத்திற்காக உங்கள் அர்ப்பணிப்பு, நம் மத்தியில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களைப் பாதுகாக்க திருஅவையின் தொடர்ச்சியான முயற்சிகளின் அடையாளமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இருபதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து நீங்கள் ஒன்றிணைந்து வரும் வேளை, உங்களில் சிலர் போர் மற்றும் மோதலின் சவாலை எதிர்கொண்டு வருகிறீர்கள் என்றும், இந்நிலையில் அமைதியை ஏற்படுத்துவதற்கும், தேவையில் இருப்போருக்கு பணியாற்றுவதற்கும் நீங்கள் கிறிஸ்துவின் அழைப்பைப் பெற்றுள்ளீர்கள் என்றும் அவர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
உங்கள் இருப்பு அனைத்து எல்லைகளையும் கடந்த ஒன்றிப்பு மற்றும் கூட்டொருமைப்பாட்டிற்கு ஒரு நற்சான்றாக அமைந்துள்ளது என்று பாராட்டிய திருத்தந்தை, உங்கள் மாநாட்டின் உரையாடல் மற்றும் பரிமாற்றங்கள், திருஅவைக்குள் முறைகேடுகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பதில் முழுமையான புரிதல் மற்றும் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
மக்கள் மற்றும் நல்ல நடைமுறைகளின் வலையமைப்பை நிறுவுவதற்கான உங்கள் முயற்சிகள் அறிவைப் பகிர்வதற்கும், ஒருவரையொருவர் ஆதரிப்பதற்கும், பாதுகாப்புத் திட்டங்கள் பயனுள்ளதாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கும் மிகவும் தேவையான ஓர் இடத்தை வழங்கும் என்பது தனது நம்பிக்கை என்பதையும் தனது வாழ்த்துச் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை
ஒரு குறிப்பிட்ட வழியில், நீதி, குணப்படுத்துதல் மற்றும் ஒப்புரவுக்கான திருஅவையின் அக்கறையின் அடையாளமாக, பாலியல் முறைகேடுகளுக்கு ஆளானவர்களுக்கு ஆறுதல் மற்றும் உதவியை வழங்குவதற்கான முன்முயற்சிகளைத் தான் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்