இத்தாலிய இராணுவப் பிரிவைச் சந்தித்த திருத்தந்தை இத்தாலிய இராணுவப் பிரிவைச் சந்தித்த திருத்தந்தை  (VATICAN MEDIA Divisione Foto)

இராணுவத்தின் மனிதாபிமானப் பணிகளை பாராட்ட வேண்டும்

ஆழமான மதிப்பீடுகளில் வேரூன்றியிருக்கும் சமுதாய வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் தெய்வீக பாதுகாப்பு தேவை என்பதை உணர்ந்து செயல்படுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தாலிய இராணுவத்தின் போக்குவரத்து மற்றும் ஆயுதங்கள் தொடர்பான பிரிவின் அங்கத்தினர்களை நவம்பர் 7ஆம் தேதி திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த இராணுவப்பிரிவின் பாதுகாவலராக புனித கிறிஸ்டோபர் அறிவிக்கப்பட்டதன் 70ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

1954ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி திருத்தந்தை 12ஆம் பயஸால் இத்தாலிய இராணுவத்தின் போக்குவரத்து மற்றும் ஆயுதங்கள் தொடர்பான பிரிவுக்கு புனித கிறிஸ்டோபர் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் 70ஆம் ஆண்டு கொண்டாடப்படுவது, சமுதாய வாழ்வின் அனைத்துத் துறைகளும், ஆழமான மதிப்பீடுகளில் வேரூன்றியிருக்கிறது என்பதையும், தெய்வீக பாதுகாப்பு அவைகளுக்கு தேவை என்பதையும் குறித்து நிற்கின்றது என்றார்.     

ஒவ்வொரு மனிதரின் வாழ்வை காப்பது, அவர்களுக்கு ஆதரவையும், உதவியையும், பாதுகாப்பையும் வழங்குவது என்பது உயரிய ஒழுக்கநெறிக் கோட்பாடுகளை உள்ளடக்கியது மட்டுமல்ல, மேலிருந்துவரும் தூண்டுதலையும் தன்னுள் கொண்டுள்ளது என மேலும் கூறினார் திருத்தந்தை.

இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனுக்கு முதலிடம் கொடுத்து, பலவீனர்கள் மற்றும் ஆபத்திலிருப்போருக்காக அர்ப்பணத்துடன் செல்படவேண்டிய தேவையையும் வலியுறுத்திய திருத்தந்தை, திறமைகளை உணர்ந்துகொள்தல், கடமையுணர்வு, தியாகம் போன்றவைகளின் முக்கியத்துவத்தையும் எடுத்தியம்பினார்.

அமைதிகாப்புப் பணிகளிலும், இயற்கைப் பேரிடர் காலங்களிலும், மக்களைக் காக்கும் வண்ணம் தற்காலிக முகாம்களையும் மருத்துவ மையங்களையும் அமைப்பதுடன், அடிப்படை வசதிகளை வழங்கும் பொருட்களை எடுத்துச் செல்லும் இந்த இத்தாலிய இராணுவப் பிரிவினரைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களின் மனிதாபிமானப் பணிகள் பாராட்டப்பட வேண்டியவை என்றார்.

இவர்களுடன் இணைந்து சேவையாற்றும் சுயவிருப்பபணியாளர்களின் சேவையையும் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்டோபர் என்பதற்கு ‘கிறிஸ்துவைக் கொணர்பவர்' என்று பொருள் என எடுத்துரைத்த திருத்தந்தை, பணிவிடை பெற அல்ல, மாறாக பணிவிடை புரியவே வந்த கிறிஸ்துவை அனைவருக்கும் எடுத்துச் செல்வதாக இந்த இராணுவப்பிரிவின் சேவைகள் இருக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2024, 16:40