ESEN  அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் ESEN அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

அர்ப்பணிப்புடன் நற்செய்தி பணி செய்யும் சீடர்கள் இன்று நமக்குத் தேவை!

தாராள மனப்பான்மை மற்றும் படைப்பாற்றலுடன் திருஅவையில் ஆழமாக வேரூன்றி, அதற்கு எப்போதும் கீழ்ப்படிந்து, தேவையில் இருக்கும் சகோதரர் சகோதரிகளுக்கு உதவும்பொருட்டு முன்னோக்கிச் செல்ல உங்களை நான் ஊக்குவிக்கிறேன் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இயேசு கிறிஸ்து ஒப்படைத்த பணியைத் தொடரும், ஊடகங்கள் வழியாகவும், நற்செய்தி அறிவிப்புப் பணி செய்யும் சீடர்களின் தேவை இன்று நமக்கு அதிகம் வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 28, வியாழன் இன்று, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ESEN  எனப்படும் 'புதிய நற்செய்தியை விதைப்பவர்' (The Sower New Evangelization) அமைப்பினர் 300 பேரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

நற்செய்தியின் மகிழ்ச்சியையும் கடவுளின் பரிவிரக்கத்தையும் தெரிவிக்கும் திறன் கொண்ட நற்செய்தி அறிவிப்பாளர்களின் சமூகத்தைக் கட்டியெழுப்ப இயேசுவுக்காக சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்ட 'I am 73’ என்ற அழகான திட்டத்தைப் பற்றி தான் கேள்விப்பட்டிருப்பதாக அவர்களிடம் கூறிய திருத்தந்தை, அர்ப்பணமுடன் நற்செய்தி அறிவிப்புப் பணி செய்ய விரும்பும் சீடர்கள் இன்று நமக்கு அதிகம் தேவை என்பதையும் மீண்டும் வலியுறுத்தினார்.

திருத்தந்தையின் குரலையும் செய்தியையும் அமெரிக்காவிலும் மற்ற ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளிலும் வாழும் பலருக்கும் கொண்டு செல்வதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, பல சகோதரர் சகோதரிகள் இறைவேண்டல் செய்யவும், பயணம் செய்ய முடியாத நிலையில் வீட்டிலிருந்து திருப்பலியில் கலந்துகொள்ளவும், கிறிஸ்தவ உருவாக்கம் (formation) மற்றும் திருஅவைச் செய்திகளைப் பெறவும் உதவிவரும் அவர்களின் நற்செயல்களுக்காவும் நன்றி கூறினார் திருத்தந்தை.

எல்லாவற்றிக்கும் மேலாக, அவர்களின் அர்ப்பணம் நிறைந்த பணிகள் வழியாக, பல்வேறு இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து குடியேறிய பலருக்கு அவர்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதற்காகவும், திருப்பீடத் தகவல்தொடர்பு துறையுடன் அவர்கள் பல ஆண்டுகளாகப் பேணிவரும் ஒத்துழைப்பிற்காகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக உரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2024, 15:10