பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் செய்தி
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
இஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள மிகவும் கடுமையான இயற்கை பேரிடரால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், இயற்கை பேரழிவின் இந்த கடினமான தருணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களோடு உடன் இருப்பதாகவும், அவர்களுக்காக ஜெபிப்பதாகவும் Valladolid உயர்மறைமாவட்ட பேராயர் Luis Javier Argüello García அவர்களுக்கு காணொளி வாயிலாகத் தனது செய்தியை அனுப்பியுள்ளார்.
இஸ்பெயின் நாட்டின் வலென்சியா பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இஸ்பெயின் நாட்டின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகவும் கடுமையான பேரழிவுகளில் ஒன்றாக இது விவரிக்கப்பட்டுள்ளது.
இலையுதிர் காலத்தில் பெய்யும் மழை வழக்கமானது என்றாலும், ஓர் ஆண்டில் பெய்ய வேண்டிய மழை வெறும் 8 மணி நேரத்தில் பெய்து, இஸ்பெயின் நாட்டு மக்கள் பலரையும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
பெருவெள்ள பாதிப்பால் தொடர்வண்டி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன எனவும், வலென்சியாவின் சுற்றுப்புறங்களில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் தவித்து வரும் நிலையில், பேரிடர் மீட்புப் பணிகளில் 1000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்பெயின் காரித்தாஸ் நிறுவனம், மறைமாவட்டம் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவளித்து வரும் அதேவேளை, இஸ்பெயின் நாட்டின் பிரதமர் அவர்கள் அக்டோபர் 31 முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்