புதிய அருளாளர் ஜோசப் தோர்ரெஸ் பதில்லா ஓர் ஆன்மிக வழிகாட்டி

19ஆம் நூற்றாண்டில் இஸ்பெயினில் வாழ்ந்து அருளாளராக உயர்ந்த அருள்தந்தை ஜோசப் தோர்ரெஸ் பதில்லா உடைய சான்றுள்ள வாழ்வு இக்கால அருள்பணியாளர்களுக்கு உதவட்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

அருளாளராக உயர்த்தப்பட்ட அருள்தந்தை ஜோசப் தோர்ரெஸ் பதில்லா அவர்கள், சிறந்த ஆன்மிக வழிகாட்டியாக ஒப்புரவு அருளடையாளம் வழங்குபவராகத் தன்னை வேறுபடுத்திக்கொண்டவர் என்றும், தேவையிலிருப்பவர்களுக்கு உதவும் இறைஇரக்கச் செயல்கள் கொண்ட அவருடைய சான்றுள்ள வாழ்வு இக்கால அருள்பணியாளர்களுக்கு உதவட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை அவர்கள், 19ஆம் நூற்றாண்டில் இஸ்பெயினில் வாழ்ந்து அருளாளராக உயர்ந்த அருள்தந்தை ஜோசப் தோர்ரெஸ் பதில்லா அவருக்குக் கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Laudato Si' செயல்பாடுகளுக்கான தளம் தொடங்கப்பட்டது பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இம்முயற்சிக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு நன்றியினை தெரிவித்து, இது தொடர்பாக  பகுவில் நாளை (11.11.2024) தொடங்கும் COP 29 காலநிலை மாற்ற மாநாடு, நமது பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதில் பயனுள்ள பங்களிப்பை வழங்கும் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.

எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு மக்களுடன் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்திய திருத்தந்தை அவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்காக தொடர்ந்து செபிப்பதாகவும், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்பெயின் பகுதி மக்கள் குறிப்பாக வலென்சியா மக்களுக்காக செபிக்கவும் தன்னார்வ மனம் கொண்டு உதவவும் கேட்டுக்கொண்டார்.  

போரினால் பாதிக்கப்படும் மொசாம்பிக் பகுதி மக்களுக்காக செபிக்க வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உரையாடல், சகிப்புத்தன்மை, நியாயமான தீர்வுகளுக்கான அயராத தேடுதல் ஆகியவற்றிற்காக அனைவரும் உழைக்கவேண்டும் என்றும், தற்போதைய சூழலானது ஜனநாயகம், நீதி மற்றும் அமைதியின் பாதையில் நம்பிக்கை இழக்காமல் இருக்க ஒட்டுமொத்த மொசாம்பிக் மக்களுக்காக சிறப்பாக செபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

போரினால் மருத்துவமனைகள், பொதுமக்கள் கட்டிடங்கள் தாக்கப்படுகின்ற உக்ரைன் மக்களுக்காக செபிப்போம், பாலஸ்தீனம், இஸ்ரயேல், லெபனோன், மியான்மார், சூடான் ஆகிய நாடுகளுக்காக செபிப்போம், உலகம் முழுவதும் அமைதி நிலவ செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள் இத்தாலியில் சிறப்பிக்கப்படும் நன்றியின் நாள் எதிர்கால சந்ததியினருக்கு நிலத்தின் வளத்தை பாதுகாக்கும் வகையில் விவசாயத்தை ஊக்குவிக்கட்டும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2024, 14:51