திருத்தந்தை பிரான்சிஸ் உடன் முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலமேயு திருத்தந்தை பிரான்சிஸ் உடன் முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலமேயு 

ஒன்றிப்பு என்னும் கடவுளின் கொடைக்காக ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்

நிசேயா திருச்சங்கத்தின் 1700ஆவது ஆண்டானது தந்தை மகன் தூய ஆவியால் திருமுழுக்கு அருளடையாளம் பெற்ற ஒவ்வொருவரும் ஒற்றுமையின் சான்றாக இருக்கவும் அதில் வளரவும் வாய்ப்பாக இருக்கின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கத்தோலிக்க மக்களும், ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையினரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமை என்னும் கடவுளின் கொடைய ஏற்றுக்கொள்ள தங்களையே வெறுமையாக்க வேண்டும் என்றும், அதற்காக ஒன்றிணைந்து உழைக்கவேண்டும், தொடர்ந்து செபிப்பதை ஒருபோதும் நிறுத்தி விடக்கூடாது என்றும் வாழ்த்துச் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 30 சனிக்கிழமை திருஅவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் பாதுகாவலரும், புனித பேதுருவின் சகோதரருமான புனித அந்திரேயாவின் திருவிழாவை முன்னிட்டு, கான்ஸ்தாந்திநோபுள் கிறிஸ்தவ ஒன்றிப்பு தலத்திருஅவையின் முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்கும் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kurt Koch அவர்கள் வழியாக அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தியானது நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை வரை இஸ்தான்புல் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களின்போது வழங்கப்பட்டது.

2024 அக்டோபர் 2 முதல் 27 வரை வத்திக்கானில் நடைபெற்ற ஆயர் மாமன்ற உரையாடல் பாதையில் கத்தோலிக்க திருஅவையின் மீளமுடியாத அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவைகளுக்கு இடையிலான உறவுகள் பரிமாணங்கள், உரையாடல் பாதையில் உயிரோட்டமாக இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

கண்டனம் செய்யாமல் செவிசாய்ப்பது என்பது கத்தோலிக்கர்களும் ஆர்த்தடாக்ஸர்களும் ஒற்றுமையை நோக்கிய தங்களதுப் பயணத்தைத் தொடரும் முறையாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், நிசேயா கிறிஸ்தவ ஒன்றிப்பு திருச்சங்கத்தின் 1700ஆவது ஆண்டானது தந்தை மகன் தூய ஆவியால் திருமுழுக்கு அருளடையாளம் பெற்ற ஒவ்வொருவரும் ஒற்றுமையின் சான்றாக இருக்க வளர வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

உடன்பிறந்த உறவு, கிறிஸ்தவர்களின் சான்றுள்ள வாழ்வு போன்றவை போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட நமது உலகிற்கு ஒரு செய்தியாக இருக்கும் என்றும், உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், லெபனோன் என போரினால் பாதிக்கப்படும் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி நிலவ சிறப்பாக செபிப்போம் என்றும்  எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2024, 14:07