பெக்கேக்நொங் இம் செந்தோம்’ (Begegnung im Zentrum)என்ற அமைப்பினை சந்திக்கும்   திருத்தந்தை பெக்கேக்நொங் இம் செந்தோம்’ (Begegnung im Zentrum)என்ற அமைப்பினை சந்திக்கும் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

ஒரு புன்னகையால், மனமார்ந்த செவிமடுத்தலால் உதவ முடியும்

இறைவனின் பார்வையில் தனித்துவம் பெற்றவர்களாக அவரால் அன்புகூரப்படும் நாம் அனைவரும் நம் வாழ்வையும் பிறருக்கான கொடையாக வழங்க தயாராக இருப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆஸ்திரியாவின் வியன்னாவில் தங்க இடமின்றி வாழும் மக்களுக்கு உதவும், ‘பெக்கேக்நொங் இம் செந்தோம்’ (Begegnung im Zentrum)என்ற அமைப்பின் தன்னார்வப் பணியாளர்கள் மற்றும் பயனாளர்கள் 30 பேரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்குழுவினரை நவம்பர் 8ஆம் தேதி காலை உள்ளூர் நேரம் 9.45 மணியளவில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு நாடுகளையும், மதங்களையும் கொண்டுள்ள இம்மக்கள் பல்வேறு அனுபவங்களையும் தங்கள் பின்னால் கொண்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டியதுடன், நாம் அனைவரும் இறைத்தந்தையின் குழந்தைகள் என்ற வகையில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம் எனவும் எடுத்துரைத்தார்.  

இந்த உதவி அமைப்பில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கி பயன்பெறுபவர்களாக இருக்கிறார்கள் எனவும், இதன் வழியாக ஒருவரை ஒருவர் வளப்படுத்துகிறார்கள் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் ஒருவருக்கொருவர் உதவுவது பொருட்களை வழங்குவதால் மட்டுமல்ல, ஒரு புன்னகையால், நட்பின் நடவடிக்கையால், சகோதரத்துவ பார்வையால், நேர்மையான மனமார்ந்த செவிமடுத்தலால், இலவச சேவையால் என பல வழிகளில் இதனை வழங்க முடியும் எனக் கூறிய திருத்தந்தை, இயேசு நம்மை அன்புகூர்ந்ததுபோல் நாம் பிறரை அன்புகூரும்போது இது இலகுவாகிறது எனவும் எடுத்துரைத்தார்.

கடவுளின் அன்பெனும் கொடைக்கு நாம் நன்றியுரைக்கும்போது, அந்த அன்பு நம்மைச் சுற்றியிருக்கும் நல்லவர்கள் வழியாகவும் நமக்கு வருகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் பார்வையில் தனித்துவம் பெற்றவர்களாக அவரால் அன்புகூரப்படும் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வையும் பிறருக்கான கொடையாக வழங்க எப்போதும் தயாராக இருப்போம் என அவர்களிடம் விண்ணப்பித்த திருத்தந்தை, தனக்காக செபிக்குமாறு அவர்களைக் கேட்டு தன் உரையை நிறைவுச் செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2024, 16:18