திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இத்தாலிய ஆயர் பேரவை

ஜார்ஜ் மாரியோ பெர்கோலியோ (Jorge Mario Bergoglio) என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1936ம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள், அர்ஜென்டீனா நாட்டின் புவனஸ் அயிரஸ் நகரில் பிறந்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கா

டிசம்பர் 17 செவ்வாய்க்கிழமை தனது 88ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியினை இத்தாலிய ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

அன்பு செய்யும் திறனை இழந்துவிட்டதாகக் கருதும் இந்த பூமிக்கு மீண்டும் அன்பை உருவாக்கும் ஓர் இதயத்தைக் கொடுப்போம் என்ற திருத்தந்தையின் Dilexit nos சுற்றுமடலில் உள்ள வரிகளைக் கொண்டு ஆரம்பிக்கும் ஆயர் பேரவையின் வாழ்த்துச்செய்தியானது உலகில் அன்பு மற்றும் நீதி கொண்ட ஓர் சமூகத்தை மீண்டும் உருவாக்க நம்மால் முடியும் என்பதை திருத்தந்தையின் சுற்றுமடல் வலியுறுத்துகின்றது  என்றும் எடுத்துரைத்துள்ளது.

வேறுபாடு, அவமதிப்பு, தன்னலம், தீமை போன்றவற்றால் அன்பின் திறன் குறைவுபட்டதாகத் தோன்றும் சூழலில், அன்பை மீண்டும் வெளிப்படுத்த மென்மையும் பலவீனமும் கொண்ட குழந்தையாக தன்னை மாற்றி நம்மிடம் வந்த இயேசுவிடமிருந்து நாம் வாழ்வின் பாடங்களைக் கற்றுக்கொள்கின்றோம் என்று எடுத்துரைத்துள்ள ஆயர் பேரவைச் செய்தியானது, வரவிருக்கும் யூபிலியை சிறப்பாக வரவேற்று கடவுளின் அருளைபெற விரும்புவதாகவும் அச்செய்தியில் தெரிவித்துள்ளது.

ஜார்ஜ் மாரியோ பெர்கோலியோ (Jorge Mario Bergoglio) என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1936ம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள், அர்ஜென்டீனா நாட்டின் புவனஸ் அயிரஸ் நகரில் பிறந்தார். இயேசு சபையில், 1969ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் நாள், அருள்பணியாளராக தன் பணிவாழ்வைத் துவங்கிய திருத்தந்தை அவர்கள், 1973ஆம் ஆண்டு முதல், 1979ஆம் ஆண்டு முடிய, அர்ஜென்டீனா இயேசு சபையின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார்.

கடந்த டிசம்பர் 13 அன்று தனது குருத்துவ வாழ்வில் 55 ஆண்டு நிறைவினைச் சிறப்பித்தார். 2001ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் 2013ஆம் ஆண்டு மார்ச் 13ம் நாள் பிரான்சிஸ் என்ற பெயருடன், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்று இன்று வரை சிறப்புடன் பணியாற்றி வருகின்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2024, 12:40