கடவுளின் அன்பான அருள்கொடையை மறந்துவிட வேண்டாம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒரே உறுதியான வழிகாட்டியாக நம்முடன் இருந்து நம்மை வழிநடத்தும் கடவுளின் அன்பான அருள்கொடையை மறந்துவிட வேண்டாம் என்றும், மனிதர்களால் புரிந்துகொள்ள இயலாத துன்பமான நேரங்களில் கடவுள் நம்மிடம் விரும்புவது என்ன என்று அவரது பாதுகாப்பு மற்றும் இரக்கத்தில் அவநம்பிக்கை கொள்ளவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 2 திங்கள் கிழமை நிகராகுவா திருப்பயணிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியின் அமல உற்பவ பெருவிழா தயாரிப்பில் இருக்கும் மக்கள் அனைவரோடும் தனது உடனிருப்பை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையும் எதிர்நோக்கும் பல உறுதியான அற்புதச் செயல்களைச் செய்யும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கும் கன்னி மரியா ஒளிரும் நம்பிக்கையின் சான்று என்றும் கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், இறைவன் மேல் கொண்டுள்ள ஆழமான உறுதியும் திருஅவையின் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையும் இரண்டு பெரிய கலங்கரை விளக்கங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அன்னை மரியின் தாய்மைத்துவத்தை அவரின் பாதுகாப்பை தங்களது ஆழமான சிறந்த ஆன்மிகத்தின் வழியாக வெளிப்படுத்தும் நிகராகுவா மக்களை வாழ்த்தியுள்ள திருத்தந்தை அவர்கள், ஈடுபாடு மற்றும் அர்ப்பண மனநிலையுடன் தனது மகிழ்ச்சியை அன்னை மரியா தனது அன்புப் பிள்ளைகளுக்கு வெளிப்படுத்தினார் என்றும், இம்மகிழ்ச்சிக்குக் காரணமாக இருப்பது அன்னை மரியா கருத்தரித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடவுளின் தாயாம் அன்னை மரியா நமக்காக பரிந்து பேசுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை என்றும், எப்போதும் நம் கரம்பிடித்து வழிநடத்த அவரிடம் கேட்பதை நாம் நிறுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், ஒன்றிணைந்து நடத்தல், அன்னை மரியின் பக்தியை வளர்த்தெடுத்தல், நற்செய்தியின் பாதையை உறுதியுடன் பின்பற்றுதல் போன்றவை நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க வழிவகுக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு மற்றும் அன்னை மரியாவின் வாழ்க்கை மறைபொருளை தியானித்து செபிக்கும் செபமாலை மிக வலிமையானது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், செபமாலையின் வழியாக நம்மிடமிருந்து யாரும் பறிக்க முடியாத, அளப்பரிய ஆற்றலையும் அருளையும் பெறுகின்றோம் என்றும் கூறியுள்ளார்
மகிழ்ச்சி, துன்பம், மகிமை, ஒளி என நாம் நினைவுகூர்ந்து செபிக்கும் மறையுண்மைகள் வழியாக நமது வாழ்வின் மறைபொருள்களை நாம் சிந்திக்கும்போது அவை நமது இதயத்திற்கு மிக நெருக்கமாகச் செல்கின்றன, அப்போது கடவுளின் பிள்ளைகள் நாம் என்ற விடுதலை உணர்வும் பாதுகாப்பும் நமக்கு கொடுக்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்