அஜாக்ஸியோவின் மறைமாவட்டப் பேராலயத்திற்கு அருகிலுள்ள திருத்தந்தை படம் கொண்ட பதாகை அஜாக்ஸியோவின் மறைமாவட்டப் பேராலயத்திற்கு அருகிலுள்ள திருத்தந்தை படம் கொண்ட பதாகை   (AFP or licensors)

கோர்சிகா தீவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை!

உரோமை ஃபியூமிசினோ விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7:45 மணிக்கு புறப்படும் திருத்தந்தை (இந்திய, இலங்கை நேரம் நண்பகல் 12.15), ஒன்றைரை மணிநேரம் பயணித்து நெப்போலியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அஜாக்ஸியோவை வந்தடைந்து அங்கு மூன்று முக்கிய சந்திப்புகளை அவர் மேற்கொள்வார் : மத்தேயோ புரூனி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 15, வரும் ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'அழகின் தீவு' என்று அழைக்கப்படும் கோர்சிகா தீவுக்குத் தனது 47-வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்ப்பகம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 12, இவ்வியாழன்று வெளியான இந்த அறிவிப்பில், கோர்சிகா தீவுக்கு செல்லும் திருத்தந்தை, அங்குத் திருநிலையினர் குழாமையும், பொதுநிலை விசுவாசிகளையும் சந்திப்பதற்கு முன்பு மத்தியதரைக்கடல் பகுதியில் இடம்பெறும் மதம் சார்ந்த மாநாடு ஒன்றில் பங்கேற்கிறார் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் உட்பட மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளின் ஆயர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றுவார் என்றும் அச்செய்திக் குறிப்பு உரைக்கிறது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான நீண்ட திருத்தூதுப் பயணத்துடன் ஒப்பிடுகையில், இது பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயணம் என்றும், அங்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரெஞ்சு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோனுடன் ஏறத்தாழ 40 நிமிடங்கள்  கலந்துரையாடவிருக்கிறார் என்றும் அச்செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோர்சிகாவின் தலைநகரான அஜாக்ஸியோவிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை என்றும், இருப்பினும் திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் (ஏஞ்சலோ ரோன்கால்லி) அவர்கள், 1952-ஆம் ஆண்டு பாரிஸில் திருப்பீடத் தூதராக இருந்தபோது இத்தீவிற்குப் பயணம் செய்தார் என்றும் அச்செய்திக் குறிப்பு உரைக்கிறது.

திருத்தந்தை புனித 23-ஆம் யோவானின் பயணத்தை நினைவுகூர்ந்த திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த உலகலாவியப் பயணத்தில் அவருடன் பயணிக்கவிருக்கின்ற செய்தியாளர்களுடன் கூடிய சந்திப்பில் இந்தத் தகவல்களை வழங்கினார்.

டிசம்பர் 15, ஞாயிறு ,பிரான்ஸ் உள்ளூர் நேரம் மாலை 6.15 மணியளவில் அஜாக்ஸியோ விமான நிலையத்திலிருந்து  புறப்பட்டு, அன்று இரவு 7.00 மணிக்கு உரோமை  ஃபியூமிசினோ விமான நிலையம் வந்தடைவார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2024, 14:37