ஏழ்மை என்பது கடவுளை முழுவதுமாக சார்ந்திருப்பது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தூய ஆவியால் தூண்டப்பட்ட கடவுளை நோக்கிய ஒரு பயணத்தில், "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறிய நாம் மீட்பராகிய கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக மாறுகிறோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 5, வியாழன் இன்று, சாசியாவில் உள்ள தூய ஆவியாரின் Canoness துறவு சபையினர் மற்றும் அதனின் தனிவரத்துடன் இணைக்கப்பட்ட மோண்ட்பெல்லியரின் அருளாளர் குய்தோவினுடைய குழுமத்தினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை, நாம் நம்மைச் சிறியவர்களாகவும், அனைவருக்கும் பணியாளர்களாகவும் மாற்றிக்கொள்ள முடிந்தால் (காண்க. மத் 23.10-11), ஏழைகளை வரவேற்று, அவர்களுக்கு நமது தொண்டு செய்யும் வாய்ப்பை வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.
'ஏழைகளின் பராமரிப்பு மற்றும் சேவையில் முதன்மையாகத் தன்னை அர்ப்பணிக்க' என்ற அருளாளர் குய்தோவினுடைய விருதுவாக்கை அவர்களுக்கு நினைவுபடுத்திய திருத்தந்தை, இதனடிப்படையில் ஒன்றிப்பு, ஏழ்மை மற்றும் சேவை குறித்த மூன்று பண்புகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.
உங்கள் சபையின் அமைப்பு விதி (rule) ஏழ்மை என்பது, தனக்கென்று எதுவும் இல்லாமல் வாழ்வது என்பதை வெளிப்படுத்துகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஒன்றுமே இல்லாமல் நாம் வாழவேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை, மாறாக, நாம் இந்த சபையில் வெறும் விருந்தாளிகள் என்பதையும் நம்மிடம் இருப்பதை ஏழைகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர்களுக்கு விளக்கினார்.
இந்த வழியில், சகோதரத்துவ வாழ்க்கை இடைவெளிகள், பணிகள் மற்றும் சேவைகளைப் பகிர்வதற்கு அப்பால் செல்கிறது என்றும், ஏழ்மை என்பது நமக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் நம்மையே முழுதுமாகக் கடவுளுக்கு கொடையாகக் கொடுப்பதாகும் என்றும் விவரித்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்