திருத்தந்தை பிரான்சிஸ் இறையியலாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் இறையியலாளர்களுடன்  (VATICAN MEDIA Divisione Foto)

உண்மையின் ஒளியாம் இயேசுவுடன் நம்மை இணைக்கும் இறையியல்

றிஸ்துவுடனான நட்புறவு, சகோதர சகோதரிகள் மற்றும் உலகத்தாருடன் கொண்டுள்ள அன்பு போன்றவற்றில் இருந்து இறையியல் பிறக்கின்றது

மெரினா ராஜ் – வத்திக்கான்

கண்ணுக்குத் தெரியாத ஒளி போன்று இறையியலும் மறைவான மற்றும் தாழ்ச்சியான பணியினைச் செய்கின்றது என்றும், இதன்வழியாக உண்மையான ஒளியாகவும் நற்செய்தியாகவும் இவ்வுலகிற்கு வந்த இயேசுவுடன் நம்மை ஒன்றிணைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 9 திங்கள்கிழமை வத்திக்கானில் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டு இறையியல் காங்கிரசின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 470 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் அருளைக் கண்டறிதல், கிறிஸ்துவுடனான உண்மையான நட்புறவில் நிலைத்திருத்தல், உண்மையின் ஒளியாக இவ்வுலகிற்கு வந்த கிறிஸ்துவிற்கானப் பாதையைக் கண்டறிதல் போன்ற வழிகளில் நம்மை முன்னோக்கிச்செல்ல இறையியல் அழைப்புவிடுக்கின்றது என்றும், கிறிஸ்துவுடனான நட்புறவு, சகோதர சகோதரிகள் மற்றும் உலகத்தாருடன் கொண்டுள்ள அன்பு போன்றவற்றில் இருந்து இறையியல் பிறக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இறையியலாளர்கள் ஒன்றிணைந்து பயணிக்க அழைக்கப்படுகின்றார்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எளிமைப்படுத்துதலில் இருந்து குணமடைவதற்காக, சிந்தனையை மறுபரீசீலனை செய்ய இறையியல் அழைப்புவிடுக்கின்றது என்றும், நம் உணர்வுகள், விருப்பம் மற்றும் முடிவுகளை வடிவமைத்து, ஒரு பரந்த இதயம், கற்பனை மற்றும் சிந்தனைக்கு வழிவகுக்கின்றது என்றும் கூறினார்.

சுருங்கிய, மூடிய மற்றும் சாதாரணமான சிந்தனை, படைப்பாற்றலையும் துணிவு போன்றவற்றை இறையியலால் உருவாக்க முடியாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நாம் படித்த இறையியல் பாடப்புத்தகங்கள் அனைத்தும் நம்மை சிந்திக்க விடாமல் அருங்காட்சியகங்களுக்குள் நூலகங்களுக்குள் மூடப்பட்டுள்ளதாக இருக்கின்றன என்றும் எடுத்துரைத்தார்.

கருத்தியல்கள் என்பவை நமது எதார்த்தத்தை, சிந்தனையை, சமூகத்தைக் கொல்கின்ற ஓர் எளிமைப்படுத்துதல் என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், ஒரு சாதாரண முடிவுபோன்று தோன்றும் கருத்தியல்கள், அதிகப்படியான ஆற்றலாகவும், கருவியாகவும், மேலோட்டமாகவும் சொன்னதை சொல்லும் கிளிபோன்று மாறுகின்றன என்று கூறினார்.

அனைவரையும் அணுகக்கூடியதாக இறையியல் இருக்க வேண்டும் என்றும், இறையியல் கற்பிக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் திறந்த இல்லம் போன்று இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பயணத்தை மீண்டும் துவங்கும் இடமாக, தேடும் இடமாக, கண்டறியும் இடமாக இறையியல் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2024, 13:45