ஒற்றுமையை உருவாக்கும் இயேசுவின் பாதையைத் தேர்ந்துகொள்ளுங்கள்

இதயத்திற்குத் திரும்புவதற்கு நாம் இயேசுவின் பாதையைத் தேர்ந்துகொள்வது முக்கியம் என்றும், இயேசுவின் பாதையைத் தேர்ந்துகொள்வதற்கு நாம் அவரிடம் திரும்பி, அவரை நமது வாழ்வின் மையமாக வைத்தல் வேண்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசுவின் பாதையைத் தேர்ந்துகொள்வது என்பது நமது இதயத்திற்குத் திரும்புதல், அவரை நமது வாழ்வின் மையமாக வைத்தல், சந்திப்பின் ஆர்வத்தை நம்மிடையே வளர்த்தல், ஒற்றுமையை உருவாக்குதல் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 7 சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் கர்தினால்கள் அவையில் புதிய கர்தினால்கள் 21 பேரை இணைக்கும் சடங்கின்போது ஆற்றிய உரையில் இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதயத்திற்குத் திரும்புங்கள் ஏனெனில் அங்கே கடவுளின் சாயலை நாம் கண்டுகொள்ளலாம் என்றும், மனிதனின் உள்புறத்தில் கிறிஸ்து வாழ்கின்றார் கடவுளின் சாயலின்படி நாம் புதுப்பிக்கப்படுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

இதயத்திற்குத் திரும்புவதற்கு நாம் இயேசுவின் பாதையைத் தேர்ந்துகொள்வது முக்கியம் என்றும், இயேசுவின் பாதையைத் தேர்ந்துகொள்வதற்கு நாம் அவரிடம் திரும்பி, அவரை நமது வாழ்வின் மையமாக வைத்தல் வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

நமது ஆன்மிக மற்றும் மேய்ப்புப்பணி வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடப்பவைகளில் நமது கவனத்தைச் செலுத்து அடிப்படையானதை மறந்துவிடும் ஆபத்து இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், முக்கியமானவைகளை விட வெளிப்புற விடயங்கள் நமது வாழ்வில் முன்னுரிமை பெறுகின்றன என்றும் கூறினார்.

சந்திப்பின் ஆர்வத்தை வளர்க்கும் இயேசுவின் பாதை

இயேசுவின் பாதையில் செல்வது என்பது சந்திப்பின் ஆர்வத்தை வளர்ப்பது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயேசு தனியாக பாதையை உருவாக்கவில்லை மாறாக உலகின் துன்பங்களால் தனிமைப்படுத்தாதவாறு இறைத்தந்தையுடன் எப்போதும் இணைந்து இருந்து அப்பாதையை உருவாக்கினார் என்றும், மனிதரின் காயங்களைக் குணப்படுத்தவும், அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைக்கவும், சுமைகளை எளிதாக்கவும், பாவக்கறைகளை அகற்றவும், இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்றும் எடுத்துரைத்தார்.

ஒற்றுமையை உருவாக்கும் இயேசுவின் பாதை

இயேசுவின் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒற்றுமையை உருவாக்கும் பாதை என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சீடர்கள் குழுவிற்கு இடையே நடந்த போட்டியானது ஒற்றுமையை சீர்குலைத்துக்கொண்டிருக்கும்போது இயேசுவின்  பாதையானது அவரைக் கல்வாரிக்கு அழைத்துச் செல்கின்றது என்றும், சிலுவையில் இயேசு தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவற்றினார் என்றும் கூறினார்.

ஒருவரும் இழக்கப்படாமல் பகைமையில் சுவர்கள் உடைக்கப்பட்டு, ஒரே கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற உணர்வுடன் வாழ வேண்டும் என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், நமது வாழ்வின் கதைகள், வேறுபட்டக் கலாச்சாரம், கத்தோலிக்கத்தை முன்னிலைப்படுத்தும் திருஅவை வழியாக நாம் அனைவரும் உடன்பிறந்த உணர்வுக்கு சான்று பகரக்கூடியவர்களாக வாழ இறைவன் நம்மை அழைக்கின்றார் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2024, 13:04