சிறைச்சாலை சிறைச்சாலை   (ANSA)

உங்கள் அனைவரையும் தந்தைக்குரிய அன்புடன் அரவணைக்கிறேன்!

கர்தினால் Ernest Simoni, அல்பேனியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் கைதுசெய்யப்பட்டு 28 ஆண்டுகள் சிறைவாசத்தையும் கட்டாய உழைப்பையும் அனுபவித்தவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தனது மனித மற்றும் ஆன்மிக நெருக்கத்தை உறுதிப்படுத்தி, கைதிகள் அனைவரையும் தான் அரவணைக்க விரும்புவதாகவும், இரக்கமுள்ள தந்தையான கடவுளை எப்போதும் நம்பும்படி அவர்களை அழைப்பதாகவும் கடிதம் ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஃபுளோரன்ஸ் பேராயர் Gherardo Gambelli, டிசம்பர் 19, இவ்வியாழனன்று பிற்பகல் சோலிசியானோ சிறையில் கைதிகளுடன் திருப்பலி கொண்டாடினார். இவரின் அழைப்பை ஏற்று அல்பேனியாவில் 28 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கர்தினால் Ernest Simoni அவர்களும் அவருடன் இணைந்து சிறப்பித்தார். இதனை அறிந்த திருத்தந்தை, அச்சிறைச்சாலையின் கைதிகளுக்கு டிசம்பர் 20, வெள்ளி இன்று எழுதிய கடிதம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நமக்காகப் பிறந்து நம் இதயங்களை நம்பிக்கையாலும் எதிர்நோக்காலும் நிரப்பும் இயேசுவை வரவேற்போம் என்று அக்கடித்தில் உரைத்துள்ள திருத்தந்தை, கைதிகள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும்,  அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், சிறை ஊழியர்களுக்கும் தனது தந்தைக்குரிய இறையாசீரை முழு மனதுடன் வழங்குவதாகவும், தனக்காக இறைவேண்டல் செய்யுமாறு அவர்களைத் தான் வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2024, 15:00