2015-ஆம் ஆண்டு இரக்கத்தின் யூபிலியின் போது புனிதக் கதவைத் திறந்த திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப் படம்) 2015-ஆம் ஆண்டு இரக்கத்தின் யூபிலியின் போது புனிதக் கதவைத் திறந்த திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப் படம்) 

யூபிலி என்பது, கடவுளையும் அடுத்திருப்போரையும் சந்திப்பதற்கான ஒரு சந்தர்ப்பம்!

ஆன்மிகத்திலும் கலாச்சாரத்திலும் சிறப்பமிக்க நகரமாக, அனைவரையும் வரவேற்கக்கூடிய இடமாக இருக்க உரோமை அழைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல்வேறு தளங்களில் உரையாடலையும் ஒன்றிப்பையும் வளர்க்கும் இடமாகத் திகழ்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

யூபிலி விசுவாசிகளை கிறிஸ்துவை சந்திக்கும் மகிழ்ச்சியை மறுபடியும்  கண்டுணர, நம்பிக்கையை ஊட்ட, மற்றும் ஆன்மிக வளர்ச்சியின் பாதையை தொடங்க அழைக்கிறது என்றும், இது அன்பு, உண்மை, மற்றும் உடன்பிறந்த உறவின் மதிப்பீடுகளில் வாழ்க்கையை ஆழமாக வாழ்வதற்கான ஓர் அழைப்பாகும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

Il Messaggero எனப்படும் நாளிதழ் ஒன்றில் டிசம்பர் 18, புதன்கிழமை இன்று வெளியிடப்பட்டுள்ள யூபிலி விழாக் குறித்த திருத்தந்தையின் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

யூத மரபில் யூபிலி மேகக் கொம்பின் (யோபெல்) ஒலியால் குறிக்கப்படும், புதுப்பிப்பு, ஓய்வு, கடன் தள்ளுபடி, மற்றும் அடிமைகளுக்கான சுதந்திரத்தின் ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது என்றும், இது சமூக நீதி மற்றும் ஆன்மிக மறுமலர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக அமைந்திருந்தது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவத்தில், இயேசு இந்த மரபுக்கு புதிய அர்த்தத்தை வழங்கி, தன்னை கடவுளின் இரக்கத்தின் உருவமாக உருவாக்கினார் என்றும், மனிதர்களை ஒவ்வொரு வகையான அடக்குமுறைகளிலிருந்து, பாவத்திலிருந்து, மற்றும் நம்பிக்கையின்மையிலிருந்து விடுவிக்க அவர் வந்தார், இதன் வழியாக  ஆன்மிக புதுப்பிப்பு மற்றும் நம்பிக்கையை வழங்கினார் என்றும் விளக்கியுள்ளார்.

யூபிலி என்பது திருப்பயணத்தாலும் குறிக்கப்படுகிறது, குறிப்பாக, 1300 -ஆம் ஆண்டில் முதல் யூபிலியிலிருந்து உரோமை, உள்ளார்ந்த புதுப்பித்தலைத் தேடும் இடமாக உள்ளது என்றும், உலகம் முழுவதிலிருந்தும் திருப்பயணிகள் புனிதக் கதவை கடந்து செல்வது, கிறிஸ்துவின் வழியாக புதிய வாழ்வின் பாதையில் நுழைதலை எடுத்துக்காட்டுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, ஆன்மிகத்திலும் கலாச்சாரத்திலும் சிறப்பமிக்க நகரமாக, அனைவரையும்  வரவேற்கக்கூடிய இடமாக இருக்க உரோமை அழைக்கப்பட்டுள்ளது என்றும்  இது பல்வேறு தளங்களில் உரையாடலையும் ஒன்றிப்பையும் வளர்க்கும் இடமாகத் திகழ்கிறது என்றும் உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2024, 12:40