திருநற்கருணை உயர்த்திக் காண்பிக்கப்படுகிறது திருநற்கருணை உயர்த்திக் காண்பிக்கப்படுகிறது  

ருவாண்டாவின் நற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் செய்தி!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ருவாண்டா தலத் திருஅவையின் நற்கருணை மாநாட்டிற்கு அனுப்பியுள்ள தனது செய்தியில், இறையாசீர், இறைவேண்டல் மற்றும் ஊக்கத்தை வழங்கியுள்ளதுடன், நற்கருணை வழியாக நம்பிக்கை மற்றும் அமைதியை நிலைநிறுத்த வலியுறுத்தியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருநற்கருணையை நாம் வாழ்ந்துகாட்டும்போது, அது நம்மை மற்றவர்களுக்காகத் தியாகம் செய்ய ஊக்குவிக்கிறது என்றும், அன்பின் நாகரிகத்தை உருவாக்க அது நம்மை ஒன்றிணைந்து பணியாற்றத் தூண்டுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ருவாண்டாவில் டிசம்பர் 4 முதல் 8-ஆம் தேதி வரை இடம்பெற்ற இரண்டாவது தேசிய நற்கருணை மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை,  ஆப்பிரிக்க நாட்டில் உள்ள அனைத்துக் கிறிஸ்தவ விசுவாசிகளும் நன்றியையும் மகிழ்வையும் வெளிப்படுத்தும் இந்த விழாவில் தானும் அவர்களுடன் இணைந்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

"நம்பிக்கை, உடன்பிறந்த உறவு மற்றும் அமைதியின் ஊற்றான நற்கருணையின் புனிதத்தில் இயேசுவின் மீது நமது பார்வையை நிலைநிறுத்துவோம்" என்ற உங்கள் மாநாட்டின் மையக்கருத்து, அனைத்துக் கிறிஸ்தவ வாழ்வின் மையமாக ஒன்றிப்பை பிரதிபலிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும், இது மனிதகுலத்தின் மீது கிறிஸ்துவின் அன்பின் உறுதியான அடையாளம் என்றும் தெரிவித்துள்ளார்.

யூபிலி மற்றும் ருவாண்டாவின் நற்செய்தி அறிவிப்பின் 125-வது ஆண்டு விழாவிற்கு ஆயத்தமாக, விசுவாசிகளை வாழ்க்கையின் அப்பமாகிய கிறிஸ்துவிடம் திரும்பும்படி ஊக்குவித்துள்ள திருத்தந்தை, பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் உள்ள எவருடனும் ஒன்றிப்பை வெளிப்படுத்தும்படி அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

'எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது' என்ற புனித ஆண்டிற்கான தனது செய்தியை எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் நம்பிக்கையின் உறுதியான அடையாளங்களாக இருக்க வேண்டும் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டு வாழாமல், சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு நற்கருணை நம்மை அழைக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கர்கள் ஒன்றித்து இனம், மொழி அல்லது கலாச்சார பாரம்பரியத்தின் தடைகளை உடைத்தெறிய அழைக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ருஹேங்கேரியின் ஆயர் மற்றும் ருவாண்டா ஆயர் பேரவையின் (CEPR) நற்கருணை மாநாட்டின் பிரதிநிதி ஆயர் வின்சென்ட் ஹரோலிமானாவுக்கு அனுப்பியுள்ள இச்செய்தியில் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2024, 11:19