திருஅவையில் ஒரு திருப்பீடத்துறையின் தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண்துறவி Simona Brambilla திருஅவையில் ஒரு திருப்பீடத்துறையின் தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண்துறவி Simona Brambilla 

முதன்முறையாக திருப்பீடத்துறையின் தலைவராக ஓர் அருள்சகோதரி

ஒரு திருப்பீடத்துறையின் செயலராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்துறவியான Simona Brambilla அவர்கள், ஒரு திருப்பீடத்துறையின் தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண்துறவியாவார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவை வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் துறவறத்தாரை திருப்பீடத்துறை ஒன்றின் தலைவராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கொன்சலாத்தா மறைப்பணி துறவுசபையைச் சேர்ந்த இத்தாலிய பெண்துறவி Simona Brambilla அவர்களை, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு நிறுவனங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புக்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக நியமித்ததோடு, அதே துறையின் இணைத்தலைவராக கர்தினால் Ángel Fernández Artime அவர்களையும் நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏற்கனவே 2011ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரை கொன்சலாத்தா துறவுசபையின் தலைவியாகச் செயல்பட்டு வழி நடத்திய அருள்சகோதரி Brambilla அவர்கள், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு நிறுவனங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புக்களுக்கான திருப்பீடத்துறையின் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

ஒரு திருப்பீடத்துறையின் செயலராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்துறவியான இவர், திருஅவையில் ஒரு திருப்பீடத்துறையின் தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண்துறவியாவார்.

ஒரு செவிலியராகச் சேவையாற்றி அதன்பின் கொன்சலாத்தா துறவு சபையில் இணைந்து மொசாம்பிக் நாட்டிலும் மறைப்பணியாளராகச் சேவையாற்றியுள்ளார் திருப்பீடத்துறையின் புதிய தலைவர், அருள்சகோதரி Brambilla.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் இவ்வுலக தலைமைப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரையுள்ள காலஅளவில் திருஅவையின் திருப்பீடத்துறைகளில் பெண்களின் பங்கேற்பு 19.2 விழுக்காட்டிலிருந்து 23.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2025, 09:45