புதன் மறைக்கல்வி உரை – யோசேப்பிற்கு இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
சனவரி 29, புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்ற தொடர் மறைக்கல்வி உரையின் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். முதல் தலைப்பாக இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றியக் கருத்துக்களை கடந்த சில வாரங்களாக எடுத்துரைத்து வரும் திருத்தந்தை அவர்கள், இன்று அதன் தொடர்ச்சியாக புனித யோசேப்பிற்கு கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு என்ற கருத்தில் நமது எதிர்நோக்கு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளால் தூய ஆறாம் பவுல் அரங்கம் நிறைந்திருந்தது. அரங்கத்தின் மேடைப்பகுதியைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வந்தடைந்ததும் திருப்பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி திருத்தந்தையை வரவேற்றனர். சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையினைத் துவக்கினார். அதன்பின் மத்தேயு நற்செய்தியில் உள்ள "இயேசுவின் பிறப்பு" என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பிரெஞ்சு, இஸ்பானியம், போலந்து, ஜெர்மானியம், அரபு, சீனம் இத்தாலியம், போர்த்துக்கீசியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.
மத்தேயு 1: 18 - 21
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய யோசேப்பிற்கு இயேசுவின் பிறப்பின் முன்னறிவிப்பு என்ற தலைப்பின்கீழ் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிகொடுப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்ற தலைப்பில் இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்து நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள கருத்துக்களைப் பற்றி இன்று நாம் தொடர்ந்து சிந்திப்போம்.
நற்செய்தியாளர் லூக்கா அன்னை மரியாவின் பார்வையில் இயேசுவின் பிறப்பு பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்கையில், நற்செய்தியாளர் மத்தேயு இயேசுவின் வளர்ப்புத் தந்தையான தூய யோசேப்பின் பார்வையில் தனது கருத்துக்களை எடுத்துரைக்கின்றார். ஈசாய் என்னும் வழிமரபு மரத்தின் கிளையில் யோசேப்பை இணைப்பதன் வாயிலாக தாவீதுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியுடன் இணைக்கிறார்.
மத்தேயு நற்செய்தியில் மரியாவிற்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டவராக யோசேப்பு காட்சியில் நுழைகிறார். யூதர்களைப் பொறுத்தவரை, மண ஒப்பந்தம் என்பது ஓர் உண்மையான சட்டப்பூர்வமான பிணைப்பாகும், ஏறக்குறைய ஓராண்டு கழித்து நடக்கவிருந்த திருமணக் கொண்டாட்டத்திற்குத் தயாரிப்பாகிறது. திருமணத்தின்போது தான் ஒரு பெண் தன் தந்தையின் பாதுகாப்பில் இருந்து தனது கணவரின் பாதுகாப்பிற்குச் செல்கின்றாள். அவருடன் வீட்டிற்குச் சென்று தாய்மை என்னும் கொடைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறாள்.
இந்தத் திருமண ஒப்பந்தமான நேரத்தில்தான் யோசேப்பு மரியா கருவுற்றிருப்பதை அறிகின்றார். மண ஒப்பந்தம் முறிந்து போகும் சூழ்நிலையை எதிர்கொண்டபோது, அவருடைய அன்பு மிகவும் கடுமையாக சோதிக்கப்படுகின்றது. அக்கால சட்டங்கள் இரண்டு உறுதியான தீர்வுகளை பரிந்துரைத்தன. ஒரு பொதுசட்டமாக, தவறிழைத்த பெண்ணை நீதிமன்றத்திற்கு அழைப்பது அல்லது ஒரு தனிப்பட்ட நடவடிக்கையாக அந்தப் பெண்ணுக்கு மணவிலக்குக் கடிதம் கொடுப்பது போன்றவை நடைமுறையில் இருந்தன.
மத்தேயு யோசேப்பை நேர்மையாளர் என்று வரையறுக்கிறார், அதாவது, கடவுளுடைய நீதிநெறிமுறைகளின்படி, உண்மைச் சட்டத்தின்படி வாழும் ஒரு மனிதர், அவர். தன் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது நேர்மையிலிருந்து உத்வேகம் பெறுகிறார். எனவே, கடவுளின் வார்த்தையைப் பின்பற்றி, யோசேப்பு சிந்தித்து செயல்படுகிறார்: தனது உள்ளுணர்வுகளும், மரியாவைத் தன்னுடன் அழைத்துச் செல்வதில் ஏற்படும் அச்சமும் தன்னை வெல்ல அவர் அனுமதிக்கவில்லை. மாறாக தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்படுவதை விரும்புகிறார். அவர் மரியாவை யாரும் அறியாமல் மறைவாக விலக்கிவிட எண்ணுகின்றார். அவருடைய இத்தகைய ஞானம் அவரைத் தவறான வழியில் நடக்காமல், கனவின் வழியே அவரில் எதிரொலிக்கும் கடவுளுடையக் குரலுக்குத் தன்னைத் திறந்தவராகவும் பணிவாகவும் ஆக்கிக் கொள்ள அனுமதிக்கிறது.
இந்த வழியில், நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பு, பழைய ஏற்பாட்டில் வரும் யாக்கோபின் மகனான "கனவின் மன்னன்"! என்ற புனைப்பெயர் கொண்ட மற்றொரு யோசேப்பை நினைவுபடுத்துகிறார், அவர் தனது தந்தையால் மிகவும் அன்பு செய்யப்பட்டார், அவரது சகோதரர்களால் மிகவும் வெறுக்கப்பட்டார், பார்வோனின் நீதிமன்றத்தில் அவரை உட்கார வைத்து கடவுள் அவரை உயர்த்தினார்.
இப்போது, நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பு எதைப் பற்றி கனவு காண்கிறார் என்று காண்போம். மரியாவின் வாழ்க்கையில் கடவுள் செய்யும் அற்புதத்தையும், அவர் தனது சொந்த வாழ்க்கையில் செய்யும் அற்புதத்தையும் கனவாகக் காண்கிறார் யோசேப்பு. ஆன்மிக பரம்பரையைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், எடுத்துச் செல்லவும் திறன் படைத்த ஒரு தந்தையாக மாறுகிறார். யோசேப்புக்கு மண ஒப்பந்தம் செய்யபட்டிருந்த மரியாவின் கருவறை கடவுளின் வாக்குறுதியால் கருத்தாங்கியுள்ளது. இந்த வாக்குறுதி, அனைவருக்கும் மீட்பின் உறுதிப்பாடு கொடுக்கப்பட்ட ஒரு பெயரைத் தாங்கியுள்ளது (திப 4:12).
"யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்ற கடவுளின் வார்த்தைகளை யோசேப்பு தனது தூக்கத்தில் கேட்கிறார். கடவுளின் இத்தகைய வெளிப்பாட்டை எதிர்கொண்ட யோசேப்பு, வேறு எந்த ஆதாரத்தையும் அவரிடம் கேட்கவில்லை. மாறாக, கடவுளை நம்புகிறார், மேலும் தனது வாழ்க்கையையும் தனக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்ட மரியாவின் வாழ்க்கையையும் பற்றிய கடவுளின் கனவை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறு, இறைத்திருவுளத்தில், நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்புடன் வாழத் தெரிந்த ஒரு நபராகக் கடவுளின் அருளில் நுழைகிறார் யோசேப்பு.
யோசேப்பு, இவை அனைத்திலும், ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்கவில்லை, மாறாக நம்புகிறார், எதிர்நோக்குகின்றார். அன்பு செய்கின்றார். காற்றில் கலந்து மறையும் வார்த்தைகள் எதையும் எடுத்துரைக்கவில்லை. மாறாக உறுதியான செயல்களால் பேசுகிறார். "இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்" என்ற திருத்தூதர் யாக்கோபின் இறைவார்த்தைகளுக்கேற்றவாறு தனது செயலிலும் உடலிலும் வாழ்விலும் இறைவார்த்தையை நடைமுறைக்குக் கொண்டு வருபராக இருக்கின்றார் யோசேப்பு. அவர் கடவுளை நம்பி கீழ்ப்படிகிறார்.“கடவுளுக்கான அவரது உள்ளார்ந்த விழிப்புணர்வு மிகவும் தன்னிச்சையான கீழ்ப்படிதலுக்கு வழிநடத்துகிறது”
நாம் பேசுவதை விட அதிகமாக செவிசாய்க்கவும், கடவுளின் கனவுகளை நமது கனவுகளாகக் காணவும், திருமுழுக்கு பெற்ற நேரத்திலிருந்து, நம் வாழ்வில் வாழ்ந்து வளரும் கிறிஸ்துவைப் பொறுப்புடன் வரவேற்கவும் இறைவனிடம் அருளை வேண்டுவோம்.
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். காங்கோ ஜனநாயகக் குடியரசில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது குறித்து தனது கவலையைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரை நிறுத்துவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் தங்களை அர்ப்பணிக்குமாறு மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகக் கூறினார். தலைநகர் கின்ஷாசாவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து வருவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அனைத்து வகையான வன்முறைகளும் கூடிய விரைவில் நிறுத்தப்படும் என்று நம்புவதாகவும் கூறினார். அமைதி மற்றும் பாதுகாப்பை உடனடியாக மீண்டும் நிலைநாட்ட செபிக்கும் வேளையில், மோதல் சூழ்நிலையை அமைதியான வழிகளில் தீர்க்க அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் அழைப்புவிடுத்தார். மேலும் எப்போதும் தோல்வியைத்தரும் போர் நிறுத்தப்பட செபிப்போம். அமைதிக்காக செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.
இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், சனவரி 31 அன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் தூய ஜான் போஸ்கோ திருவிழாவை குறிப்பிட்டு அருள்பணியாளரும் கல்வியாளருமான அப்புனிதர் போன்று வாழக் கற்றுக்கொள்ள வலியுறுத்தினார். தன்னுடைய ஆன்மிக அனுபவத்திலிருந்து வாழ்க்கையின் ஆசிரியராகக் கடவுளைப் பார்த்து, ஒவ்வொரு சூழ்நிலையிலும் இரக்கமுள்ள தந்தையாகிய கடவுளை நம்புவதற்கு தூய ஜான் போஸ்கோவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இவ்வாறு தனது செப விண்ணப்பங்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்ததும் இயேசு கற்பித்த செபமானது இலத்தீன் மொழியில் பாடப்பட்டது. அதன் பின் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்