புதன் மறைக்கல்வி உரை – மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்னும் தொடர் மறைக்கல்வி உரையில், கிறிஸ்துவின் குழந்தைப்பருவம் பற்றியக் கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் "அன்னை மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் மற்றும் மரியாவின் பாடல்" என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரையினை வழங்கினார்.
பிப்ரவரி 5 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான திருப்பயணிகள் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு செவிசாய்க்க ஆர்வமுடன் காத்திருந்தனர். கடந்த வாரங்களில் இயேசுவின் குழந்தைப்பருவம் குறித்த நற்செய்தி வாசகங்கள் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவிற்கு கபிரியேல் வானதூதர் காட்சியளித்தது, யோசேப்பிற்குக் கனவில் வலியுறுத்தியது என தனது கருத்துக்களை வழங்கினார். இன்று அதன் தொடர்ச்சியாக அன்னை மரியா எலிசபெத் சந்திப்பு குறித்தக் கருத்துக்களை எடுத்துரைப்பதற்காக அரங்கத்தின் மேடைப் பகுதியினை வந்தடைந்தார். சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைக்கல்வி உரையைத் துவக்கினார். அதன்பின் லூக்கா நற்செய்தியில் உள்ள மரியா எலிசபெத்தை சந்தித்தல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
லூக்கா 1: 39 - 42
மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.
இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர் இருமல் காரணமாக தன்னால் மறைக்கல்வி உரையினை எடுத்துரைக்க இயலாது என்றும், தனக்குப் பதிலாக பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரோலி அவர்கள் புதன் மறைக்கல்வி உரையை வாசித்தளிப்பார் என்றும் திருப்பயணிகளிடம் கூறினார்.
"ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" (லூக். 1: 45) என்ற நற்செய்தி வார்த்தைகளை உள்ளடக்கிய, மரியா எலிசபெத்தை சந்தித்தல் மற்றும் மரியாவின் பாடல் என்ற தலைப்பின் கீழ் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை வாசித்தளித்தார் பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரோலி. திருத்தந்திதையின் மறைக்கல்வி உரை சுருக்கத்திற்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
மரியா எலிசபெத்தை சந்தித்தல் என்ற தலைப்பின் வழியாக நமது எதிர்நோக்காம் இயேசுவின் அழகை இன்று நாம் காண இருக்கின்றோம். கன்னி மரியா எலிசபெத்தை சந்திக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக கருவில் இருக்கும் இயேசு, தனது மக்களை சந்திக்க வருகின்றார். “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில், அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்” (லூக்கா:1:68) என்று செக்கரியா பாடுவதற்கேற்றவாறு இயேசு மக்களைத் தேடி வருகின்றார்.
வானதூதரால் தனக்கு அறிவிக்கப்பட்ட இறைவனின் திருவுளம் அறிந்து வியப்புற்ற மரியா விவிலியத்தில் அழைப்பு பெற்ற பிறரைப் போலவே எழுந்து புறப்படுகின்றார். இஸ்ரயேலின் இளம்பெண்ணான மரியா உலகத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதைத் தேர்வு செய்யவில்லை, மற்றவர்களிடம் இருந்து வரும் ஆபத்துகள் மற்றும் பிறரின் அநியாயத் தீர்ப்புகளுக்கு அஞ்சவில்லை, மாறாக மற்றவர்களைச் சந்திக்க வெளியே செல்கிறார்.
ஒருவர் அன்பு செய்யப்படுவதாக உணரும்போது, அன்பின் சூழலை ஏற்படுத்துவதற்கான ஓர் ஆற்றலை அனுபவிக்கிறார்; திருத்தூதர் பவுல் கூறுவது போல், கிறிஸ்துவின் பேரன்பே நம்மை ஆட்கொள்கிறது (2கொரி. 5:14) நம்மை உந்தித்தள்ளுகின்றது, நகர்த்துகிறது. மரியா இத்தகைய அன்பின் ஈர்ப்பை உணர்ந்து, தனது உறவினரான முதிர்வயதுள்ள ஒரு பெண்ணுக்கு உதவச் செல்கிறார். முதிர்வயது பெண்மணியாகிய எலிசபெத் ஒரு நீண்டகாலக் காத்திருப்புக்குப் பிறகு, எதிர்பாராத விதமாக இறைத்திருவுளத்தால் கருத்தரிக்கின்றார். அவரது முதிர்வயதில் கருவுற்றதால் உடலளவில் சோர்வடைகின்றார். கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்து, கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையையும், அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றும் எதிர்நோக்கையும் பகிர்ந்து கொள்கிறார்.
இரண்டு பெண்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒரு திகைப்பூட்டும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அருள்மிகப் பெற்றவரே வாழ்க” என்ற வானதூதரின் வாழ்த்தும், வயதான பெண்மணியான எலிசபெத்தின் குரலும் தன் வயிற்றில் சுமக்கும் குழந்தை குறித்த இறைவாக்கை எடுத்துரைக்கின்றன. பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! (லூக். 1:42) என்ற அருளும், ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்.1:45) என்ற பேறும் அன்னை மரியாவிற்கு கிடைக்கின்றது.
மெசியா என்ற தனது மகனின் அடையாளத்தையும், அவரது தாயாக தனது பணியை அங்கீகரிப்பதற்கு முன்பாகவும், மரியா தன்னைப் பற்றிப் பேசாமல், கடவுளைப் பற்றிப் பேசுகிறார். தனது நம்பிக்கையின் நிறைவை மகிழ்ச்சியை, எதிர்நோக்கை, கடவுளைப் புகழ்ந்து பாடும் பாடலாக வெளிப்படுத்துகின்றார். அன்னை மரியாவின் இத்தகைய பாடலானது ஒவ்வொரு நாளும் மாலைப்புகழ் வழிபாட்டின்போது நமது ஆலயங்களில் பாடப்படுகின்றது.
மீட்கும் கடவுளுக்கான அன்னை மரியின் இத்தகைய பாடலானது தாழ்மையான ஊழியரின் இதயத்திலிருந்து பாயும், இஸ்ரயேலின் செபத்தை ஒருங்கிணைத்து நிறைவேற்றும் ஒரு புனிதமான நினைவுச் சின்னமாகின்றது. இது விவிலிய அடிப்படைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது,
பாஸ்கா மையக்கருத்தின் மிகப்பெரிய அடையாளமாக, மீட்பின் பாடலாக மாறுகின்றது. இப்பாடலில் உள்ள வினைச்சொற்கள் அனைத்தும் கடந்த காலத்தில் உள்ளன, அன்பின் நினைவால் நிரப்பப்பட்டுள்ளன, இது நிகழ்காலத்தை நம்பிக்கையால் தூண்டுகின்றன, எதிர்காலத்தை நம்பிக்கையால் ஒளிரச் செய்கின்றன. எதிர்காலத்தைச் சுமக்கும் நிகழ்காலத்தின் பெண்ணாக மரியா கடந்த காலத்தின் அருளைப் பாடுகிறார்.
இந்தப் பாடல் வரியின் முதல் பகுதி, கடவுளைப் புகழ்ந்து பாடுவதாகவும், இரண்டாவது பகுதி, நினைவு, இரக்கம், வாக்குறுதி என்னும் இறைத்தந்தையின் செயல்களை எடுத்துரைக்கும் மூன்று வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றது.
சிறியவரான மரியாவில் பெரிய காரியங்களை நிறைவேற்றவும், அவரை இறைமகனின் தாயாக்கவும் விரும்பி தன்னைத் தாழ்த்திய கடவுள், தனது மக்களை மீட்கத் தொடங்கினார். ஆபிரகாமுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட உலகளாவிய ஆசீர்வாதத்தை நினைவு கூர்ந்தார்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, கடவுளுடைய ஒவ்வொரு வாக்குறுதியின் நிறைவேற்றத்திற்காக எப்படிக் காத்திருப்பது என்பதை அறியவும், நம் வாழ்வில் மரியாவின் பிரசன்னத்தை வரவேற்கவும் இன்று கடவுளிடம் அருளைக் கேட்போம். அவருடைய பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதன் வழியாக, நம்புகின்ற எதிர்நோக்குகின்ற ஒவ்வொரு ஆன்மாவும் "கடவுளின் வார்த்தையைக் கருத்தரித்து பிறப்பிக்கிறது" என்பதை நாம் அனைவரும் கண்டறிந்து கொள்வோம்.
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரோலி அவர்கள் வாசித்தளிக்க, கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துன்புறும் உக்ரைன், இஸ்ரயேல், பாலஸ்தீனம், பாலஸ்தீனத்தின் இடம்பெயர்ந்த மக்கள் ஆகியோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், திருத்தூதர் பவுல் வலியுறுத்துவது போல எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள். (உரோ.12:12-13) என்றும் எடுத்துரைத்தார்.
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது செபவிண்ணப்பங்களை எடுத்துரைத்ததும் விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து கூடியிருந்த திருப்பயணிகள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்