அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் செயலர் ஆலோசியஸ் ஜான் அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் செயலர் ஆலோசியஸ் ஜான்  

மனித கடத்தலுக்கு எதிராக ஒன்றுதிரள காரித்தாஸ் அழைப்பு

மனித கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பையும் சேவைகளையும் வலுப்படுத்தவும் அழைக்கும் அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 8, செவ்வாய்க்கிழமையன்று, மனிதர்கள் சந்தை பொருள்களாகக் கடத்தப்படுவதற்கு எதிரான செபநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி மனித கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பையும் ஆதரவான சேவைகளையும் வலுப்படுத்துமாறு உலக அரசுகளை  வலியுறுத்தவும் அனைத்து நல்லெண்ணம் கொண்ட மக்களுக்கும் அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.  

பாதிக்கப்பட்ட அனைவருடனும் உடன் பயணிப்பதற்கும், அவர்களைப் பாதுகாப்பதற்கும், ஒற்றுமை அலை ஒன்று தேவைப்படுகிறது என்றும், அவர்கள் நிபந்தனையற்ற இரக்கத்துடன் வரவேற்கப்படவேண்டும் என்றும் அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலர் Aloysius John அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், மோதல்கள், வன்முறைகள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள், காலநிலை  மாற்றங்கள் போன்றவற்றால் தூண்டப்படும், தீவிர வறுமை, மற்றும் அதனின் மூலக் காரணங்களை நிவர்த்தி செய்யாமல், மனித கடத்தலை ஒழிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார் Aloysius John.

போர், மற்றும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதன் வழியாகவும், மனித கடத்தல் வலையில் விழும் அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் வழியாகவும், மக்கள் தங்கள் நிலங்களில் மாண்புடன் வாழ அனுமதிக்கும் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் வழியாகவும் மட்டுமே மனித கடத்தலை தடுத்து நிறுத்த முடியும் என்றும் எடுத்துக்காட்டினார் Aloysius John.

அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் 162 உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் பணிபுரிந்து வருவதோடு, மனித கடத்தலுக்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கத்தோலிக்க NGOக்களின் COATNET என்ற கூட்டமைப்பின் உறுப்பினர்களாகவும் உள்ளனர். மேலும் மனித கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவும், அத்துடன் இந்தக் குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாக்கவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2022, 16:06