அருள்பணியாளர்கள் அருள்பணியாளர்கள் 

குருக்களுக்கு மடல்: திருஅவை வரவேற்கும் இல்லமாக மாறுவதாக

ஆண்டவரால் வாழ்பவர்களைக்கொண்ட மற்றும், உடன்பிறந்த உணர்வுடன்கூடிய உறவுகளால் வழிநடத்தப்படுகின்ற, திறந்த கதவுகளோடு வரவேற்கும் ஓர் இல்லமாக திருஅவை இருக்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகின் அனைத்து அருள்பணியாளர்களும், திருஅவையின் ஒருங்கிணைந்த பயணப் பாதையில், அச்சமின்றி தொடர்ந்து நடக்குமாறு, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மாரியோ கிரெக் அவர்களும், அருள்பணியாளர்கள் பேராயத் தலைவர் பேராயர் Lazzaro You Heung Sik அவர்களும் இணைந்து எழுதியுள்ள மடலில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட புனித யோசேப்பு பெருவிழாவை முன்னிட்டு உலகின் அனைத்து அருள்பணியாளர்களுக்கும் மடல் எழுதியுள்ள இவ்விரு தலைவர்கள், ஆண்டவரால் வாழ்பவர்களைக்கொண்ட மற்றும், உடன்பிறந்த உணர்வுடன்கூடிய உறவுகளால் வழிநடத்தப்படுகின்ற, திறந்த கதவுகளோடு வரவேற்கும் ஓர் இல்லமாக திருஅவை இருக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஒருங்கிணைந்த பயணம் என்ற பாதை வழியாக திருத்தந்தை பரிந்துரைக்கும் திருஅவையின் உண்மையான முகம் இதுவே என்றுரைத்துள்ள அத்தலைவர்கள், இவ்வுலகில் உடன்பிறந்த உணர்வு வெளிப்படுத்தப்படவேண்டியதன் அவசரத் தேவையையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இறைமக்கள் அனைவரோடும் ஒன்றிணைந்து தூய ஆவியாருக்குச் செவிமடுத்து, நம் நம்பிக்கையைப் புதுப்பிப்பதற்கும், நம் சகோதரர் சகோதரிகளோடு நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கு புதிய பாதை மற்றும், மொழிகளைக் காணவும், உடன்பிறந்த உணர்வு மிகவும் முக்கியம் என்று அத்தலைவர்களின் மடல் கூறுகிறது.

ஆயர்கள் மாமன்றத்தை வெற்று வார்த்தையாக மாற்றும் சம்பிரதாயம், பிரச்சனைகளை வெறும் கொள்கையளவில் சிந்திப்பதற்கு உள்ளாக்கும் அறிவாற்றல், எந்தவொரு மாற்றத்தையும் வெளிக்கொணராத பழக்கவழக்கங்களில் பாதுகாப்பில் நம்மை நிறுத்தும் நிலை ஆகியவற்றின் ஆபத்துக்கள் குறித்தும் அம்மடல் எச்சரிக்கை விடுக்கின்றது.

நற்செய்தி அறிவிப்புப்பணியில் உடன் பொறுப்புணர்வு

மறைமாவட்ட அளவில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்ற முதல்நிலை தயாரிப்புக்கள், மேய்ப்புப்பணியில் கூடுதல் வேலை என்று, அவற்றைத் தனிப்பட்டவரின் சுமையாகக் கருதாமல், பங்குத்தள குழுமங்களோடு பகிர்ந்து ஆற்றுமாறு அருள்பணியாளர்களுக்கு அம்மடல் அழைப்பு விடுக்கின்றது.

நம் வாழ்க்கையில் இறைவார்த்தையில் வேரூன்றியிருப்பது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தவர்களாய், ஒருவர் ஒருவருக்குச் செவிமடுப்பதிலும், அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வில் வளர்வதிலும் ஆர்வம் காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ள அத்தலைவர்கள், ஒன்றிணைந்தபயணப் பாதை, அனைவரையும் சந்திப்பதற்குத் தூண்டுதல் அளிக்கின்றது என்று கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2022, 16:05