திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் Fortunatus Nwachukwu திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் Fortunatus Nwachukwu 

காசநோயாளிச் சிறாருக்கு வழங்கப்படும் பராமரிப்பு அதிகரிக்கப்பட...

ஒவ்வோர் ஆண்டும் 1,50,000த்துக்கு மேற்பட்ட குழந்தைகள் HIV நோய்க் கிருமிகளுடன் பிறக்கின்றனர், அதேநேரம் இந்நோய்க்குச் சிகிச்சை பெறுகின்ற சிறாரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை - பேராயர் Nwachukwu

மேரி தெரேசா: வத்திக்கான்

HIV மற்றும், காசநோய்க் கிருமிகளால் தாக்கப்படும் சிறாருக்குத் துவக்கநிலையிலேயே சிகிச்சை அளித்து அவர்களைப் பராமரிப்பதன் வழியாக, வருங்காலத் தலைமுறைகள், மனிதக்குலத்திற்கு தங்களின் திறமைகள் மற்றும், பங்களிப்பை வழங்க முடியும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர், நலவாழ்வு குறித்த ஐ.நா. கூட்டமொன்றில் எடுத்துரைத்துள்ளார்.

WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம், ஜெனீவா நகரில் மே 22, இஞ்ஞாயிறன்று துவக்கிய 75வது மாநாட்டில், "அமைதிக்கு நலவாழ்வு, நலவாழ்வுக்கு அமைதி" (மே 24); "HIV மற்றும், காசநோய்க் கிருமிகளால் வாழ்கின்ற சிறாருக்குச் சிகிச்சை" (மே 25); “புகைப்பிடித்தலால் ஏற்படும் பிரச்சனையைக் குறைப்பதற்கு கத்தோலிக்கத் திருஅவையின் நடவடிக்கை” (மே 25) ஆகிய தலைப்புக்களில், திருப்பீடத்தின் சார்பில் கருத்துக்களை எடுத்துரைத்தார், பேராயர் Fortunatus Nwachukwu.

எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவதற்கு, உலக அளவில், ஏன், வருவாய் குறைந்த நாடுகளிலும் மருந்துகள் கிடைப்பதால், அவர்களில் பலர் அந்நோய்க் கிருமிகளுடனேயே பணியாற்றுவதையும், தங்களின் குடும்பங்களைப் பராமரிப்பதையும் பார்க்க முடிகின்றது என்றுரைத்தார், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் Nwachukwu.

இருந்தபோதிலும், ஒவ்வோர் ஆண்டும் 1,50,000த்துக்கு மேற்பட்ட குழந்தைகள் HIV நோய்க் கிருமிகளுடன் பிறக்கின்றனர், இந்நோய்க்குச் சிகிச்சை பெறுகின்ற சிறாரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை, ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சம் சிறார், எய்ட்ஸ் தொடர்புடைய நோய்களால் இறக்கின்றனர், இத்தகைய இறப்புகளுக்கு காசநோயே முக்கிய காரணம், 2020ம் ஆண்டில் காசநோயால் ஏறத்தாழ 2,26,000 சிறார் இறந்துள்ளனர் என்ற புள்ளி விவரங்களையும் பேராயர் Nwachukwu அவர்கள் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று, இந்நோயாளிச் சிறாருக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் பராமரிப்பு மற்றும், சிகிச்சைகளுக்கு எதிர்பாராதவிதமாக இடையூறை உருவாக்கியுள்ளது என்றுரைத்த பேராயர் Nwachukwu அவர்கள், இந்நோயாளிச் சிறாருக்கு கத்தோலிக்கத் திருஅவை வழங்கிவரும் பராமரிப்புகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

இந்நோய்கள் குறித்த உரோம் செயல் திட்டம், இச்சிறாருக்கு உதவிவருவதையும் குறிப்பிட்ட பேராயர் Nwachukwu அவர்கள், இச்சிறாருக்குப் பயனுள்ள சிகிச்சைகள் வழங்கப்பட, தோழமையில் நம் அர்ப்பணத்தைப் புதுப்பிப்போம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விண்ணப்பம் நிறைவேற்றப்படும் என்ற தன் நம்பிக்கையையும், மே 24, இச்செவ்வாயன்று, WHO நிறுவனத்தின் 75வது மாநாட்டில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2022, 13:56