திருத்தந்தை பிரான்சிஸ்,  வயதுமுதிர்ந்தோர் திருத்தந்தை பிரான்சிஸ், வயதுமுதிர்ந்தோர் 

தாத்தாக்கள் பாட்டிகள் உலக நாளுக்கு நிறைபேறுபலன்கள்

திருஅவை வழங்கும் நிறைபேறுபலன்களைப் பெறுவதற்கு, ஒப்புரவு அருளடையாளம், மற்றும், திருப்பலியில் பங்குகொண்டு திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிக்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

வருகிற ஜூலை மாதம் 24ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் இரண்டாவது உலக நாள் நிகழ்வுகளில் பங்குகொள்கின்றவர்களுக்கு, பல நிறைபேறுபலன்களை, Apostolic Penitentiary என்ற திருப்பீட நீதிமன்றம், மே 30 இத்திங்களன்று அறிவித்துள்ளது.

கத்தோலிக்கத் திருஅவையில் பாவங்களுக்கு மன்னிப்பு மற்றும், இரக்கம் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான Apostolic Penitentiary என்ற திருப்பீட நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நிறைபேறுபலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வுலக நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், அல்லது, உலகெங்கும் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில், தவம் மற்றும், பிறரன்பின் உண்மையான உணர்வால் உந்தப்பட்டு பங்குபெறும், தாத்தாக்கள் பாட்டிகள், வயதுமுதிர்ந்தோர், கத்தோலிக்கர் ஆகிய அனைவரும் இப்பலன்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே உலக நாளில், நோயாளிகள், கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற தேவையில் அல்லது, துன்புறும் நம் சகோதரர், சகோதரிகளை நேரில் சென்று பார்த்துப்பேசவும் அல்லது, ஊடகம் வழியாக அவர்களோடு உரையாடவும் போதுமான நேரம் ஒதுக்கின்ற நம்பிக்கையாளர்களும் இந்நிறைபேறு பலன்களைப் பெறலாம் எனவும் அத்திருப்பீட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அந்த உலக நாளில், முக்கிய காரணங்களால் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேற இயலாமல் இருக்கின்ற வயதான நோயாளிகள், தங்களின் இறைவேண்டல்கள், நோயின் வேதனைகள், மற்றும் வாழ்வின் துன்பங்களை இரக்கமுள்ள இறைத்தந்தையிடம் அர்ப்பணிப்பதாலும், குறிப்பாக, அந்நாளில் திருத்தந்தை ஆற்றும் உரைகள் மற்றும், பல்வேறு நிகழ்வுகளை ஊடகம் வழியாக கேட்பதாலும் இந்நிறைபேறுபலன்களைப் பெறலாம்.

மேலும், நம்பிக்கையாளர்கள், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு அருள்பணியாளர்கள் தயாராகவும், தாராளமனதோடும் இருக்கவேண்டும் எனவும், அத்திருப்பீட நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது

திருஅவை வழங்கும் நிறைபேறுபலன்களைப் பெறுவதற்கு, ஒப்புரவு அருளடையாளம், மற்றும், திருப்பலியில் பங்குகொண்டு திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிக்கவேண்டும்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டில் தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் உலக நாளை அறிவித்தார். அந்நாள், இயேசுவின் தாத்தா பாட்டியான புனிதர்கள் அன்னா, சுவக்கீன் திருவிழாவுக்கு அருகில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்படுகின்றது. ஜூலை மாதம் 26ம் தேதி புனிதர்கள் அன்னா, சுவக்கீன் திருவிழா சிறப்பிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2022, 15:07