அருள்பணி Fernando Chica Arellano அருள்பணி Fernando Chica Arellano 

இளையோரும் வேளாண்மையும்: நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்குதல்

எவரும் ஒதுக்கப்படாவண்ணம் வளமையான மற்றும், அமைதியான வருங்காலத்தை ஊக்குவித்தல், அனைவருக்கும் நலமான உணவு கிடைப்பதை உறுதிசெய்தல் ஆகியவற்றில் இளையோர் குழுக்கள் ஈடுபட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான்

இளையோரின் இளமைத்துடிப்பு, படைப்பாற்றல், உயரிய எண்ணங்கள், சக்திகள் ஆகியவை பாதுகாக்கப்படவேண்டும், அவை வளர அவர்களோடு உடன்பயணிக்கவேண்டும், மற்றும், அவை ஊக்கப்படுத்தப்படவேண்டும் என்று, இளையோர் பற்றிய கருத்தரங்கில் FAO, IFAD மற்றும், PAM நிறுவனங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் அருள்பணி Fernando Chica Arellano அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூன் 28, இச்செவ்வாயன்று, FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனத்தில், “இளையோரும் வேளாண்மையும்: நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்குதல்” என்ற தலைப்பில், FAO, IFAD மற்றும், PAM நிறுவனங்களில் பணியாற்றும் திருப்பீடப் பிரதிநிதி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இளையோர் கருத்தரங்கில் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார் அருள்பணி Arellano.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, கோவிட்-19 வத்திக்கான் பணிக்குழு, பிரான்செஸ்கோ பொருளாதாரம், உரோம் நகரிலுள்ள கத்தோலிக்க அரசு-சாரா அமைப்புகள் ஆகியவற்றின் ஆதரவோடு, அத்திருப்பீடப் பிரதிநிதி அலுவலகம் இக்கருத்தரங்கை நடத்தியது.

உணவுப் பாதுகாப்பை ஊக்குவித்தல், மற்றும், இயற்கை வேளாண் உணவு உற்பத்தி அமைப்புகளை மீட்டெடுப்பது ஆகியவற்றில் இளையோர் வழிநடத்தும் செயல்திட்டங்கள் குறித்து இக்கருத்தரங்கில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், எவரும் ஒதுக்கப்படாதவண்ணம் வளமையான மற்றும், அமைதியான வருங்காலத்தை ஊக்குவித்தல், அனைவருக்கும் நலமான உணவு கிடைப்பதை உறுதிசெய்தல் ஆகியவற்றுக்கு இளையோர் குழுக்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்த கலந்துரையாடல்கள் இக்கருத்தரங்கில் முக்கிய இடம்பெற்றன.

இக்கருத்தரங்கு நடைபெறுவதற்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்த அருள்பணி Arellano அவர்கள், வேளாண்மை மற்றும், சமுதாயத்தில் இளையோரின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் என்னென்ன? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இளைய தலைமுறைகளை ஏமாற்றம் அடையசெய்யக்கூடாது, இப்பூமிக்கோளத்தினின்று பசிக்கொடுமையை அகற்றுவதற்கு நமக்கு உதவ அவர்களிடம் அறிவு உள்ளது, காத்திருப்பவர்களாக அவர்களை நோக்காமல் வருங்காலம் குறித்து கருத்தாக்கம் கொண்டவர்களாக பார்க்கவேண்டும் என்றும் அருள்பணி Arellano அவர்கள் கூறியுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2022, 15:30