திருப்பீட பொருளாதாரச் செயலகத்தின் கீழ், பணியாளர் நிர்வாகம்
மேரி தெரேசா: வத்திக்கான்
Praedicate Evangelium என்ற புதிய திருத்தூது கொள்கை விளக்கம், ஜூன் 5, வருகிற ஞாயிறன்று நடைமுறைக்கு வருகின்றவேளை, திருப்பீடப் பணியாளர் நிர்வாகம், திருப்பீடச் செயலகத்திலிருந்து, பொருளாதாரச் செயலகத்திற்கு (SPE) மாற்றப்பட்டு வருகின்றது என்று, திருப்பீட பொருளாதாரச் செயலகத்தின் தலைவர் அருள்பணி Juan Antonio Guerrero Alves அவர்கள் அறிவித்துள்ளார்.
அருள்பணி Guerrero அவர்கள் திருப்பீடத்தின் அனைத்துத் துறைகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், Praedicate Evangelium திருத்தூது கொள்கை விளக்கத்தை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாக, பணியாளர் நிர்வாக அமைப்பில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் குறித்து அவர் விளக்கியுள்ளார்..
புதிய மனிதவள இயக்குநரகம் உருவாக்கப்படுவது குறித்தும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அருள்பணி Guerrero அவர்கள், இப்புதிய இயக்குநரகத்தின் கடமைகள் மற்றும், பொறுப்புகள் குறித்து விளக்கியுள்ளதோடு, வத்திக்கானில் அனைத்துப் பணியாளர் நியமனத்தை மேம்படுத்துவது பற்றிய ஆலோசனைகள் மற்றும், பரிந்துரைகளையும், திருப்பீடத் துறைகளின் தலைவர்களிடம் கேட்டுள்ளார்.
தொழில் திறமைகள்
திருப்பீடத்தின் ஒவ்வொரு துறையும் பணியாளர்களைத் தெரிவுசெய்கையில், அத்துறைகளின் பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு, அவற்றுக்குத் தேவையான திறமை உள்ளவர்கள் தெரிவுசெய்யப்படுவது முக்கியம் என்றும், பணியாளர்களின் தொழில் திறமை மற்றும், எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய இரண்டும் முதலில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர் பயிற்சி
திருப்பீடத்தின் பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுகின்றவர்கள், பல்வேறு பயிற்சிகள் வழியாக தொழிலில் திறமையுடன் செயல்பட உதவுவதன் வழியாக, தற்போது பணியில் இருப்பவர்களின் தொடர் பயிற்சியை மேம்படுத்தவும், துறைகளுக்குள்ளே இடமாற்றம் பெறவும், புதிய தொழில் திறமைகளைப் பெற்றுக்கொள்ளவும் புதிய இயக்குனரகம் முயற்சிகளை மேற்கொள்ளும்.
ஒவ்வொரு பணியாளரின் பணியை மதிப்பீடு செய்யும் அமைப்பை உருவாக்குவதற்குப் பரிந்துரைத்துள்ள அருள்பணி Guerrero அவர்கள், இதில், சட்டம், ஒழுங்குமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.
திறமையின் அடிப்படையில் ஊதிய உயர்வு
திருப்பீடத்தில் புதிதாகப் பணியில் சேர்க்கப்படுகின்றவர்களுக்கு, திறமையின் அடிப்படையில், ஊதியம் மற்றும், ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், பணியாளர்களுக்கு நிர்ணய ஊதியத்தோடு, அவர்களின் பணியை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், அருள்பணி Guerrero அவர்கள் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வத்திக்கான் பணியாளர்கள் மத்தியில் ஒன்றிப்பு
திருப்பீடத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இடையே நல்ல ஒரு சூழல் உருவாகவேண்டும், அவர்களுக்கு இடையே ஒன்றிப்பை வளர்க்க புதிய இயக்குநரகம் முயற்சிகளில் ஈடுபடும் எனவும் கூறியுள்ள அருள்பணி Guerrero அவர்கள், இவையனைத்தையும் செயல்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவைப்படும் மற்றும், இவற்றுக்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும், புதிய கொள்கை விளக்கம் ஜூன் 5ம் தேதி நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்