திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் சார்ந்த ஆவணக் காப்பகம் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் சார்ந்த ஆவணக் காப்பகம்  

யூதஇன ஒழிப்பின்போது வத்திக்கானிடம் உதவிகேட்டவர்கள் பற்றிய பதிவு

இரண்டாம் உலகப் போரின்போது திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களிடம் உதவிகள் கேட்ட யூதர்கள் பற்றிய ஆவணங்களை திருப்பீடச் செயலகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

இரண்டாம் உலகப் போரின்போது இடம்பெற்ற யூத இன ஒழிப்பு நடவடிக்கையில் வத்திக்கானின் உதவியைக் கேட்ட யூதர்கள், திருமுழுக்குப் பெற்றவர்கள் மற்றும், அதனைப் பெறாதவர் ஆகிய அனைவருக்கும் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் அனுப்பிய உதவிகள் குறித்த வரலாற்று ஆவணங்களை, திருப்பீடச் செயலகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விண்ணப்பத்தின்பேரில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்கள், ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களிடம் உதவி கேட்டவர்களின் விவரங்கள், 170 தொகுப்புகளாக, அல்லது ஏறத்தாழ நாற்பதாயிரம் பதிவுகளாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் எழுபது விழுக்காட்டுப் பதிவுகள் தற்போது கிடைக்கும் எனவும், மீதமுள்ளவை, அதன் துணைப் பதிவுகளாக, இறுதித்தொகுப்புகளோடு தயார்படுத்தப்பட்டு வருகின்றன  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த வெளியீடு, இரண்டாம் உலகப் போருக்கு முன்னும், அப்போரின்போதும் நாத்சி கொள்கையாளர்களின் சித்ரவதைகளுக்கு அஞ்சி வத்திக்கான் வழியாக உதவிகோரிய 2,700க்கும் மேற்பட்ட யூதர்கள் குறித்த பதிவுகளை, யூதஇன ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து உயிர்பிழைத்த மற்றும், அதற்குப் பலியானவர்களின் உறவினர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறித்து, ஜூன் 23, இவ்வியாழனன்று வத்திக்கான் செய்திகளிடம் பேசியுள்ள, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், இவை அனைத்தும் விலைமதிப்பற்ற பரம்பரைச் சொத்தாக உள்ளன என்று கூறியுள்ளார்.   இந்தப் பதிவுகள் அனைத்தும் புகைப்படவடிவில் வெளியிடப்பட்டுள்ளன எனவும், உதவிகள் கேட்ட அனைவரின் பெயர்கள் குறித்த விவரங்கள் உள்ளன எனவும், பேராயர் காலகர் அவர்கள் கூறியுள்ளார். 

“இன்று உங்களுக்கு நான் எழுதுகிறேன் என்றால், தொலைவிலிருந்து உங்களிடம் உதவிகேட்கத்தான்” என்று, கையாலாகாத நிலையில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களுக்கு, ஆயிரக்கணக்கானவர்கள் உதவிகேட்டு எழுதியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உதவி கேட்டிருந்தவர்களில் ஒருவர், இஸ்ரேலைப் பூர்வீகமாகக்கொண்ட 23 வயது நிரம்பிய ஜெர்மன் பல்கலைக்கழக மாணவராவார். 1938ம் ஆண்டில் திருமுழுக்குப் பெற்ற இவர், இஸ்பெயின் நாட்டிலிருந்த  Miranda de Ebro என்ற வதைமுகாமில் கைதியாக இருந்து விடுதலை பெறுவதற்காக, 1942ம் ஆண்டு சனவரி 17ம் தேதி கடைசி முயற்சியாக உதவிகேட்டு விண்ணப்பித்திருக்கிறார். இறுதியில் அந்த மாணவர், 1939ம் ஆண்டில் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்த தன் தாயோடு இணையும் வாய்ப்பைப் பெற்றார். லிஸ்பனிலிருந்து புறப்பட எல்லாமே தயாராக இருக்கிறது. எனக்குப் பதியதொரு வாழ்வு தயாராக இருக்கிறது, ஆனால் வெளியிலிருந்து எனக்கு உதவி தேவை என அந்த மாணவர் தன் பழைய இத்தாலிய நண்பரிடம் கூறி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் வழியாக மத்ரித் நகரிலுள்ள திருப்பீட தூதர் தனக்கு உதவுமாறு கேட்கச்சொல்லியிருக்கிறார். அத்தூதரின் தலையீட்டால் மற்றவர்கள் அந்த வதைமுகாமிலிருந்து வெளியேறும் வாய்ப்பைப் பெற்றதை அந்த மாணவர் அறிந்திருந்தார். இவ்வாறு அவர் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2022, 16:48