சுரண்டப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்கும் முறைகள்
மேரி தெரேசா: வத்திக்கான்
“பல்வேறு நிலைகளில் உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும், அவர்களைப் பாதுகாப்பதற்கு வழிமுறைகள்” என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, ஜூலை 12, இச்செவ்வாயன்று, தன் இணைய பக்கத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் கோவிட்-19 பெருந்தொற்று பணிக்குழுவும், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் பணிக்குழுவும் இணைந்து இக்கட்டுரையை வெளியிட்டுள்ளன.
பல நாடுகளில் அடிமைமுறைக்கு எதிரான சட்டங்கள் இருக்கின்றபோதிலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள், குற்றக்கும்பல்கள் போன்றோரின் அநீதிகளுக்கு அவர்கள் பலியாகின்றனர் என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
வேலையில் சேர்வதற்குப் பணம் தண்டுதல், வன்முறை அச்சுறுத்தல், கைதுகள், நாடுகடத்தல், கூலி மறுப்பு, ஆவணங்களைப் பறிமுதல் செய்தல் அல்லது அவற்றை அழித்தல் போன்ற அநீதச் செயல்களால், புலம்பெயர்ந்தோரின் பொருளாதார வறுமையைப் பயன்படுத்தும் குற்றக்கும்பல்கள், அம்மக்களை சட்டத்திற்குப் புறம்பேயுள்ள வேலைகளில் நிரந்தரமாக அமர்த்துகின்றன என்று அக்குழுக்கள் குறை கூறியுள்ளன.
இந்நிலையால், சுதந்திரம் மறுக்கப்படல், கட்டாய வேலை, வேலை நேர அதிகரிப்பு, நியாயமற்ற கூலி, பாதுகாப்பற்ற பணியிடங்கள், கடினமான வேலைகள் போன்ற நெருக்கடிகளை புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்கின்றனர் என்றுரைக்கும் அக்கட்டுரை, ஏழ்மை, நிதி நெருக்கடி போன்றவற்றால் புலம்பெயர்ந்தோர் நவீன அடிமைமுறைக்கு உள்ளாகின்றனர் என்று உரைக்கின்றது.
புலம்பெயர்ந்தோர் எந்நிலையில் இருந்தாலும், தொழிலாளர்கள் என்ற முறையில் அவர்கள் அனைத்து உரிமைகளையும் கொண்டிருக்கின்றனர் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள அக்கட்டுரை, வலுவற்றோர் மற்றும், அவர்களைத் துன்புறுத்துவோர் மீதுள்ள அச்சம் ஆகியவற்றினின்று அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாத்தல், மேம்படுத்தல், மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தல் என்பது பற்றியும், இவர்களுக்கு கத்தோலிக்கர் ஆற்றிவரும் நற்பணிகள் பற்றியும், இத்தொழிலாளர்களின் சான்றுகள், மற்றும், வாழ்வு பற்றியும், இக்கட்டுரையில் விளக்கமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்