உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மாரியுப்போல் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மாரியுப்போல் 

திருப்பீடம்: திருத்தந்தை மனித வாழ்வுக்கு ஆதரவாக இருக்கிறார்

உக்ரைனில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கவும், அம்மக்களோடு தோழமையுணர்வைக் காட்டவும்வேண்டும் என்று திருத்தந்தையும், திருப்பீட அதிகாரிகளும் பலநேரங்களில் நன்மனம்கொண்டோரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரைகளில் அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதைவிட மனித வாழ்வுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசுகிறார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம், ஆகஸ்ட் 30, இச்செவ்வாயன்று கூறியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் இடம்பெறும் போர்கள் குறித்த தன் கவலையை வெளியிட்டு, அமைதிக்காகவும், போர் நிறுத்தப்படவும் எண்ணற்ற தடவைகள் விடுத்த விண்ணப்பங்கள் குறித்து அண்மை நாள்களில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்குப் பதிலளித்துள்ள திருப்பீடம், போர்கள் குறித்த திருத்தந்தையின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

உக்ரைன் மீது இரஷ்யா நடத்திவரும் தாக்குதல்கள், அறநெறப்படி அநீதியானது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது, கொடூரமானது, அறிவற்றது, முரணானது, மத உணர்வை இழிவுபடுத்துவது என திருத்தந்தை, அப்போருக்கு எதிரான தன் கண்டனத்தை எப்போதும் தெரிவித்தார் எனவும், திருப்பீட செய்தித் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

திருத்தந்தை ஓர் அரசியல்வாதியாக அல்ல, மாறாக, ஒரு மேய்ப்பர் என்ற முறையில், ஒவ்வொரு மனித வாழ்வும் பாதுகாக்கப்படவேண்டும் என பேசுகிறார், உக்ரைனில் இடம்பெறும் போர் குறித்த அவரது எண்ணற்ற விண்ணப்பங்கள், இந்த ஒரு கோணத்திலே பார்க்கப்படவேண்டும் என்றும் திருப்பீட அறிக்கை கூறுகின்றது.

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர்ச் சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அவரது உடன்உழைப்பாளர்களும் எண்ணற்ற தடவைகள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர், அவர்கள் பெரும்பாலான நேரங்களில், அனைத்து மேய்ப்பர்களும், மக்களும் அந்நாட்டிற்காகச் செபிக்கவேண்டும் என்றே அழைப்புவிடுத்தனர், நன்மனம் கொண்ட அனைவரும், அந்நாட்டில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கவும், அம்மக்களோடு தோழமையுணர்வைக் காட்டவும்வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டனர் எனவும், அவ்வறிக்கை கூறுகிறது.

இரஷ்ய அரசியல் விமர்சகர் Alexander Dugin அவர்களின் மகள் வாகன விபத்தில் தாக்கப்பட்டதை இம்மாதம் 24ம் தேதி புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை குறிப்பிட்டது குறித்து, உக்ரைனில் அரசியல் மற்றும், நிர்வாகத் துறைகள் முரண்பட்ட விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2022, 14:59