வத்திக்கான் அருங்காட்சியகத்தில் சுற்றுலாப் பயணிகள் வத்திக்கான் அருங்காட்சியகத்தில் சுற்றுலாப் பயணிகள் 

திருப்பீடத்தின் உலக சுற்றுலா நாள் செய்தி

சுற்றுலாத் துறை, நீதி, நீடித்த நிலையான வளர்ச்சி, மற்றும், ஒருங்கிணைந்த உலகின் மீள்கட்டமைப்புக்கு உதவும் முக்கியமான துறைகளில் ஒன்றாகும் - ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை

மேரி தெரேசா: வத்திக்கான்

பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் துறை, நீதி, நீடித்த நிலையான வளர்ச்சி, மற்றும், ஒருங்கிணைந்த உலகின் மீள்கட்டமைப்புக்கு உதவும் முக்கியமான துறைகளில் ஒன்றாக மாறியுள்ளதால், அதன் மீள்பிறப்பை திருஅவை நம்பிக்கை கண்களோடு நோக்குகிறது என்று திருப்பீடம் கூறியுள்ளது.  

செப்டம்பர் 27, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலக சுற்றுலா நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், இவ்வாண்டில் உலக சுற்றுலா நாள், “சுற்றுலா குறித்த மீள்சிந்தனை” என்ற தலைப்பில் சிறப்பிக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தலைப்பை மையப்படுத்தி தன் செய்தியை வெளியிட்டுள்ள கர்தினால் செர்னி அவர்கள், நீதி நிறைந்த சுற்றுலா, நீடித்த நிலையான வளர்ச்சிக்கு சுற்றுலா, ஒருங்கிணைந்த சுற்றுலா, நம்பிக்கையைப் பேணிவளர்க்கும் சுற்றுலா போன்ற தலைப்புகளில் சுற்றுலா குறித்த தன் சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ளார்.

சுற்றுலாவை மீண்டும் எழுச்சிபெறச் செய்வது, உலகில் அமைதி, மக்கள் மத்தியில் நட்பு மற்றும் புரிந்துணர்வுக்குப் பணியாற்றுவதில் முக்கியமானது எனவும், இவ்வாறு அது ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்குச் சேவை புரிகின்றது எனவும் அச்செய்தி கூறுகிறது.

ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மையப்படுத்தி, சுற்றுலா புதுப்பிக்கப்படுவதை ஊக்குவிக்கும் வழிகளில் கத்தோலிக்கத் திருஅவை கவனமாக உள்ளது என்றும், இவ்வாண்டு அக்டோபர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை இஸ்பெயினின் Santiago de Compostelaவில் நடைபெறும் சுற்றுலாவின் மேய்ப்புப்பணி குறித்த 8வது உலக மாநாட்டின்போது சுற்றுலாவின் பல்வேறு கூறுகள் அலசப்படும் என்றும் கர்தினாலின் செய்தி கூறுகிறது.

சுற்றுலாவும் திருப்பயணங்களும் என்ற தலைப்பில் Compostela யூபிலி ஆண்டின் பின்புலத்தில் இம்மாநாடு நடைபெறும் என்றும், அனைவரும் நம்பிக்கைத் தீபத்தை ஒளிரச்செய்வார்கள் என்ற திருத்தந்தையின் வார்த்தைகளால் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறோம் என்றும் கர்தினால் செர்னி அவர்கள் அச்செய்தியில் கூறியுள்ளார்.

உலக சுற்றுலா நாள்

உலக சுற்றுலா நாள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உலக சுற்றுலா அமைப்பால் (UNWTO) தொடங்கப்பட்டது. உலக சுற்றுலா நாள் 1980ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 27ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. கல்வி, தொழில்கள் வழியாக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வழிகள் குறித்தும், சுற்றுலா இப்பூமிக்கோளத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் சிந்திக்க இவ்வாண்டு இவ்வுலக நாள் அழைப்பு விடுக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2022, 14:54