உலக கல்வியறிவு நாளுக்கு கர்தினால் பரோலின் செய்தி
மேரி தெரேசா: வத்திக்கான்
நல்லிணக்கம், ஒன்றிப்பு, தோழமை, உடன்பிறந்த உணர்வு, நிலைத்த அமைதி ஆகியவற்றின் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப, உலகில் கல்வி கற்பிக்கப்படும் முறைகளில் மாற்றத்தைக் கொணர மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகளும் முயற்சிகளும் உதவும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
செப்டம்பர் 08, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட உலக கல்வியறிவு நாளுக்குத் திருத்தந்தந்தையின் சிந்தனைகளை உள்ளடக்கி, திருத்தந்தையின் பெயரால், ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவன தலைமை இயக்குனர் Audrey AZOULAY அவர்களுக்கு கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் தலைமையகத்தைக்கொண்டு செயல்படும் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும், கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவின் இயக்குனர் AZOULAY அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், கல்விக்காக தங்களை அர்ப்பணித்துள்ள அந்நிறுவனத்தாருக்கு, திருத்தந்தை இறையாசிரை இறைஞ்சுவதாகவும் கூறியுள்ளார், கர்தினால் பரோலின்.
பல்வேறு நெருக்கடிகளால் நிறைந்துள்ள இன்றைய உலகில் மாற்றத்தைக் கொணர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு, எல்லாரையும் உள்ளடக்கிய ஒரு கல்விமுறை தேவைப்படுகின்றது எனவும், இதனாலேயே 'கல்விக் கிராமம்' என்ற ஓர் அமைப்பு கட்டியெழுப்பப்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.
ஒரு குழந்தையை வளர்த்தெடுக்க கிராமம் முழுவதும் ஈடுபடவேண்டும் என்ற ஆப்ரிக்க பழமொழியைக் குறிப்பிட்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இதனாலேயே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் உலகளாவிய கல்வி ஒப்பந்தத்தில் அனைவரும் கையெழுத்திடுமாறு அழைப்புவிடுக்கிறார் என்று கூறியுள்ளார்.
எழுத்தறிவின்மையை அகற்றுவதற்கு பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதையும் விடுத்து, இன்றும் உலகில் 77 கோடியே 10 இலட்சம் பேர் எழுத, வாசிக்கத் தெரியாதவர்கள் என ஐ.நா. கூறியுள்ளது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்