புலம்பெயரும் உக்ரேனிய மக்கள் புலம்பெயரும் உக்ரேனிய மக்கள்  

சட்டங்கள், பொதுவாகப் பகிரப்படும் மதிப்பீடுகளால் தூண்டுதல் பெற...

அப்பாவி குடிமக்கள், புலம்பெயர்ந்தோர் போன்றோரின் பாதுகாப்புக்கும், அவர்களின் மனிதாபிமான தேவைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் - பேராயர் Caccia

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகளாவிய சட்டமும், அதன் விதிமுறைகளும் அங்கீகரிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருப்பீடம் தன் ஆதரவை வழங்குகிறது என்று, ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Gabriele Caccia அவர்கள் கூறியுள்ளார்.

நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில், உலகளாவிய சட்டம் குறித்து நடைபெற்ற ஐ.நா. பொது அவையின் 77வது அமர்வில் அக்டோபர் 27, இவ்வியாழனன்று உரையாற்றிய பேராயர் Caccia  அவர்கள், உலகளாவிய சட்டத்தை முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் திருப்பீடத்தின் பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஆயுதம் ஏந்திய மோதல்களில் பாதிக்கப்படுவோரின் மனிதாபிமானத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பேராயர் Caccia  அவர்கள், 1968ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒப்பந்தங்களின் சட்டம் குறித்த ஐ.நா. கருத்தரங்கில் கொண்டுவரப்பட்ட, எந்த வகையிலும் மீறப்பட முடியாத சட்டம் (ius cogens) குறித்த கருத்தியலுக்கு, திருப்பீடம் தொடக்கத்திலேயே ஆதரவளித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.  

உலகளாவிய சட்டத்தில் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட முடியாத விதிமுறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு, உலகளாவிய சட்ட ஆணையம், சரியான சில வழிகாட்டுதல்களை வளர்ப்பதற்கு எடுத்துவரும் முயற்சிகளைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள பேராயர் Caccia  அவர்கள், தாமதிக்கப்படாமல் நிறைவேற்றப்படவேண்டிய உலகளாவிய சட்டங்கள், பொதுவான மதிப்பீடுகளின் அடிப்படையில் உலகளாவிய சமுதாயம் அமைக்கப்பட்டுள்ளதைப் பிரதிபலிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள்

போர் இடம்பெறும் இடங்களில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதற்குப் பணியாற்றி வருகின்ற உலகளாவிய சட்ட ஆணையம், ஆயுதம் ஏந்திய மோதல்களின்போது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதற்கு, உலகளாவிய மனிதாபிமான சட்டத்தில் சிறிதளவே இடம் உள்ளதைக் குறிப்பிட்டுள்ளது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்பாவி குடிமக்கள், புலம்பெயர்ந்தோர் போன்றோரின் பாதுகாப்புக்கும், மனிதாபிமானத் தேவைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும், மற்றும், சூழலியல் பாதுகாப்பு குறித்த அக்கறை பரவலாக்கப்படவேண்டும் என்றும், பேராயர் Caccia  அவர்கள் ஐ.நா. பொது அவையின் 77வது அமர்வில் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2022, 13:15