பகிர்ந்தளிக்கப்படும் உணவு பகிர்ந்தளிக்கப்படும் உணவு  

பசியை அகற்றுவது குறித்த திருப்பீடத்தின் உயர்மட்ட கருத்தரங்கு

உலகில் இன்றும் 82 கோடியே 80 இலட்சம் பேர் பசியால் வாடுகின்றனர். 2030ஆம் ஆண்டில் ஏறத்தாழ 67 கோடிப் பேர் பசிக்கொடுமையால் துன்புறுவர் என அஞ்சப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

பசி மற்றும், காலநிலை மாற்றம் சார்பான பிரச்சனை குறித்து ஆய்வுசெய்வதற்கு உயர்மட்ட அளவிலான ஒருநாள் கருத்தரங்கை, உரோம் நகரிலுள்ள ஐ.நா. நிறுவனங்களுக்கு திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் அலுவலகம், இம்மாதத்தில்  ஏற்பாடு செய்துள்ளது.

அரசு-சாரா அமைப்புகள், உரோம் மாநகரில் இயங்கும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றோடு இணைந்து இம்மாதம் 27ம் தேதி, "எவரும் புறக்கணிக்கப்படக்கூடாது, சிறந்த உற்பத்தி, சிறந்த உணவு, சிறந்த சுற்றுச்சூழல், மற்றும், அனைவருக்கும் சிறந்த வாழ்வு" என்ற தலைப்பில் அக்கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.

இவ்வாண்டில் கடைப்பிடிக்கப்பட்ட உலக உணவு நாள் (அக்டோபர் 16) தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில், சமுதாயத்தில் எவருமே புறக்கணிக்கப்படக் கூடாது என்பதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டு, வறுமை, மற்றும், வளர்ந்துவரும் சமத்துவமின்மைகளை அகற்றுவதற்கு வழிவகைகள் பரிந்துரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பூமிக்கோளத்தின் நலன் மற்றும், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நீடித்த நிலையான வளர்ச்சித்திட்டங்கள் குறித்தும், இக்கருத்தரங்கில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் உலகில் வறுமை ஒழிக்கப்படும் என, உணவு சார்ந்த ஐ.நா. அலுவலகங்கள் இவ்வாண்டு ஜூலை மாதம் 6ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் உறுதி கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அத்திருப்பீட அலுவலகம், உலகில் இன்றும் 82 கோடியே 80 இலட்சம் பேர் பசியால் வாடுகின்றனர் எனவும், 2030ஆம் ஆண்டில் ஏறத்தாழ 67 கோடிப் பேர் பசியால் துன்புறுவோர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

பிரதிநிதிகளின் நேரடிபங்கேற்பு மற்றும், இணையதளம் வழியாக இக்கருத்தரங்கு நடைபெறும் என்றும், அத்திருப்பீட அலுவலகம் கூறியுள்ளது. 

உரோம் மாநகரில் தலைமையகங்களைக் கொண்டிருக்கின்ற, ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனம் (FAO), வேளாண் வளர்ச்சி உலகளாவிய நிதி நிறுவனம் (IFAD) உலக உணவுத் திட்ட நிறுவனம் (WFP) ஆகியவற்றுக்குத் திருப்பீடத்தின் நிரந்தப் பார்வையாளராகப் பணியாற்றும் அலுவலகம் நடத்தவுள்ள இக்கருத்தரங்கில், கத்தோலிக்கச் சிந்தனையுடைய அரசு-சாரா அமைப்புகள், யுனெஸ்கோவின் உயிரியல் அறநெறி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, உரோம் நகரின் ஐரோப்பிய பல்கலைக்கழகம், Regina Apostolorum பாப்பிறை பல்கலைக்கழகம் ஆகியவை கலந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2022, 15:04