நாட்டின் நலனுக்காக ஒற்றுமையின் பாதையைப் பின்பற்றுங்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இன்று மனிதகுலத்தையும் நமது பூமியையும் அச்சுறுத்தும் பல சவால்களை நாம் திறம்பட எதிர்கொள்ள முடியும் என்பது நம் இதயங்களில் உள்ள ஒற்றுமையின் உணர்வால் மட்டுமே உறுதியாக நம்ப முடியும் என்று அனைத்துலக ஒலிம்பிக் விளையாட்டின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள Thomas Bach அவர்கள், பல்வேறு வத்திக்கான் அலுவலகங்களுடன் இணைந்து, அனைத்துப் பிரச்சனைகள் மற்றும் மோதல்களுக்கு நியாயமான மற்றும் அமைதியான தீர்வுகளைத் தேடுமாறு உலகத்தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைதி என்பது திருஅவையும் விளையாட்டு உலகமும் இணைந்து அனைத்து மக்களையும் ஊக்குவிக்கும் ஒரு பொதுவான மதிப்பு என்பதால், கலாச்சாரம் மற்றும் கல்வி; பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்க்கை; மற்றும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கான வத்திக்கான் அலுவலகங்களின் தலைவர்கள், அனைத்துலக ஒலிம்பிக் விளையாட்டு அமைப்பு தலைவரின் வேண்டுகோளோடு தாங்களும் இணைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய ஒலிம்பிக் விளையாட்டுகள் மக்களுக்கிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான அழைப்பையும், உரையாடல் மற்றும் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான முன்னுரிமையையும் அளிக்கிறது என்று மேலும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல்கள், கொந்தளிப்புகள் மற்றும் கடுமையான சவால்கள், போர், காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரத் துயரங்கள் அனைத்தும், உலகெங்கிலுமுள்ள பல இலட்சக்கணக்கான மக்களுக்குச் சொல்ல முடியாத வலியையும் வேதனையையும் கொண்டு வந்துள்ளன" என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகள் ஒற்றுமையின் சிறந்த அடையாளங்களாக அமைகின்றன என்றும், அவை தனிநபர்களையும் மக்களையும் ஆரோக்கியமான போட்டியில் ஒன்றிணைத்து, தடகளப் போட்டியில் அமைதிக்கான உண்மையான பாதையைக் காண நம் உலகை ஊக்குவிக்கிறது என்றும், அவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது
ஒவ்வொரு நாட்டின் நலனுக்காகவும் இந்த ஒற்றுமையின் பாதையைப் பின்பற்றுங்கள்" என்று உலகத் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கி அழைப்பு விடுப்பதுடன் இவ்வேண்டுகோள் அறிக்கை நிறைவு பெறுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்