2வது நிலை தயாரிப்பு ஏட்டில் ஒதுக்கப்பட்டோரின் குரல்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
வத்திக்கானில் 2023ஆம் ஆண்டு அக்டோபரில், “ஒன்றிணைந்து பயணம்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின், கண்டங்கள் அளவிலான இரண்டாவது நிலை தயாரிப்பு வரைவுத் தொகுப்பை, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகம் அக்டோபர் 27, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.
இவ்வரைவுத் தொகுப்பை செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் செய்தித் தொடர்பாளரான இயேசு சபை கர்தினால் பJean-Claude Hollerich அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் மற்றும், ஏனையரோடு கலந்தாலோசித்தபின்னர் அனைத்துக் கண்டங்களிலிருந்தும் தலத்திருஅவைகள் அனுப்பியிருந்த தொகுப்புகளை வைத்து இந்த இரண்டாவதுநிலை தயாரிப்பு ஏடு (DCS) உருவாக்கப்பட்டது என்று கூறினார்.
ஏறத்தாழ 45 பக்கங்கள் கொண்ட, கண்டங்கள் அளவிலான இந்த இரண்டாவதுநிலை தயாரிப்பு ஏடு, மனித சமுதாயம் முழுவதன் மனக்காயங்கள், அச்சங்கள், குறைகள் மற்றும், கோரிக்கைகள் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது எனவும், கர்தினால் Hollerich அவர்கள் அறிவித்தார்.
ஏழைகள், பூர்வீக இனத்தவர், குடும்பங்கள், மணமுறிவுபெற்று மறுதிருமணம் புரிந்தவர்கள், கணவன் அல்லது மனைவியை விட்டுப் பிரிந்து தனித்துவாழும் பெற்றோர், LGBTQ அதாவது ஓரினச்சேர்க்கை மக்கள், புறக்கணிக்கப்பட்டதாக உணரும் பெண்கள் போன்றோரின் குரல்கள் கேட்கப்படும்வண்ணம் இத்தயாரிப்பு ஏடு அமைக்கப்பட்டுள்ளது.
உரிமை மீறல் அல்லது மனித வர்த்தகம் அல்லது இனப் பாகுபாடு ஆகியவற்றுக்குப் பலியாகி இருப்போர், அருள்பணியாளர்கள், அருள்பணித்துவ வாழ்வைத் துறந்தவர்கள், பொதுநிலையினர், கிறிஸ்தவர்கள், திருஅவையிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டவர்கள், அருள்பணித்துவத்தில் சீர்திருத்தத்தை விரும்புவோர், பெண்களின் பங்கு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் திருவழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவோர், அதைப் பின்பற்றாதோர் போன்றோரின் குரல்களும் கேட்கப்படுமாறு இத்தயாரிப்பு ஏடு உருவாக்கப்பட்டுள்ளது.
மறைசாட்சிய வாழ்வை எதிர்கொள்ளும் நாடுகளில் வாழ்வோர், தினமும் வன்முறை மற்றும் போரோடு வாழ்வோர், பில்லி சூனியம் மற்றும், குலமரபு வழிபாடு ஆகியவற்றுக்கு எதிராய்ச் செயல்படுவோர் போன்றோரின் குரல்களும் கேட்கப்படுமாறு, ஏறத்தாழ 45 பக்கங்கள் கொண்ட இந்த தயாரிப்பு ஏடு (DCS) அமைக்கப்பட்டுள்ளது.
“கண்டங்கள் அளவிலான தயாரிப்பு ஏடு” என்று தலைப்பில், இத்தாலியம் மற்றும், ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இவ்வேடு, தலத்திருஅவைகளுக்கு இடையேயும், தலத்திருஅவை மற்றும், உலகளாவியத் திருஅவைக்கு இடையேயும் உரையாடலை அனுமதிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்று செய்தியாளர் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
திருத்தந்தை ஏற்கனவே அறிவித்துள்ளதுபோன்று, 16வது உலக ஆயர்கள் மாமன்றம், 2023ஆம் ஆண்டு அக்டோபரிலும், பின்னர் மீண்டும் 2024ம் ஆண்டிலும் நடைபெறும் என்பதை செய்தியாளர் கூட்டத்தில் நினைவுபடுத்திய கர்தினால் Hollerich அவர்கள், உலக ஆயர் மாமன்றத் தயாரிப்பு நிலைகளில் எவரும் புறக்கணிக்கப்படாமல் அனைவரின் குரல்களும் கேட்கப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
2021ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கிவைத்த ஒன்றிணைந்த பயணப் பாதையை அடிப்படையாக வைத்து இத்தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்