கடும்நோயால் துன்புறுபவர்களுக்கு உதவும் கரம் கடும்நோயால் துன்புறுபவர்களுக்கு உதவும் கரம் 

இத்தாலி: கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர் பராமரிப்பு நாள்

உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள கடும் நோயால் பாதிக்கப்பட்ட 5 கோடியே 68 இலட்சம் பேருக்கு ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புத் தேவைப்படுகிறது - WHO

மேரி தெரேசா: வத்திக்கான்

கடுமையான நோயினால் தாக்கப்பட்டுள்ளவர்களைப் பராமரிப்பது என்பது, அவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும், ஆன்மிக உதவிகளை ஆற்றுவதாகும் என்று, பாப்பிறை வாழ்வுக் கழகத்தின் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 11, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட புனித மார்ட்டின் தெ போறஸ் அவர்களின் திருநாள், இந்நாளில் இத்தாலியில் கடைப்பிடிக்கப்பட்ட, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர் பராமரிப்பு தேசிய நாள் ஆகிய இரண்டு நிகழ்வுகளை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளிடம் அந்நோய் குறித்த தன் கருத்தை தெரிவித்த பேராயர் பாலியா அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நோய் குறித்து நன்கறிந்த இத்தாலி, 2010ஆம் ஆண்டில் இந்நோயாளருக்குச் சிகிச்சை வழங்குவது குறித்த சட்டத்தை இயற்றியது எனவும், அவ்வாண்டிலிருந்து, மருத்துவ கல்லூரி பல்கலைக்கழகத்தில் இந்நோய் குறித்த பாடம் இணைக்கப்பட்டுள்ளது எனவும்  கூறியுள்ளார், பேராயர் பாலியா.

இந்நோயாளர்களுக்குரிய பராமரிப்பு உலக அளவில் ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகளாவிய வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கையை, 2017ஆம் ஆண்டில் பாப்பிறை வாழ்வுக் கழகம் ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டதையும் குறிப்பிட்டார் பேராயர் பாலியா.

வருகிற டிசம்பர் மாதத்தில் பாப்பிறை வாழ்வுக் கழகம், இந்நோய் குறித்த பன்னாட்டு மெய்நிகர் கருத்தரங்கு ஒன்றையும் நடத்தவிருப்பது குறித்து குறிப்பிட்ட பேராயர் பாலியா அவர்கள், அதில் சில முக்கிய பன்னாட்டு வல்லுனர்கள் உரையாற்றுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது, அந்நோயாளர்கள், அவர்கள் குடும்பங்கள், மற்றும், அவர்களுக்குச் சிகிச்சையளிப்போரின் ஒருங்கிணைந்த வாழ்வின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று, WHO என்னும் உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிர் வாழ்க்கையை அச்சுறுத்தும் நோயால் பாதிக்கப்பட்ட 5 கோடியே 68 இலட்சம் பேருக்கு ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புத் தேவைப்படுகிறது. இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் 2 கோடியே 57 இலட்சமாக இருந்தது என்று, WHO நிறுவனம் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2022, 13:52