நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறை உரோம் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறை உரோம் 

நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறையின் 400ம் ஆண்டு

கத்தோலிக்கத் திருஅவையின் உலகளாவியப் பண்பை மீண்டும் உறுதிசெய்வதில் நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம் ஆற்றியுள்ள பலனுள்ள சேவைகள், 400ஆம் ஆண்டு நிறைவு மாநாட்டில் நினைவுகூரப்படும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

தற்போது நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறையாகவுள்ள அப்போதைய விசுவாசப் பரப்பு பேராயம் (1622-2022) தொடங்கப்பட்டதன் நானூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நவம்பர் 16, இப்புதன் முதல், 18 வெள்ளி வரை நடைபெறவிருக்கும் உலகளாவிய மாநாடு குறித்து, நவம்பர் 15, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது. 

உரோம் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் இம்மூன்று நாள் மாநாடு குறித்து, நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறையின் அலுவலகத் தலைவர் பேரருள்திரு கமில்லஸ் ஜோன்பிள்ளை, வரலாற்று அறிவியல் பாப்பிறை கழகத்தின் தலைவர் அருள்பணி பெர்னார்ட் அர்தூரா, உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் அதிபர் அருள்பணி லெயோனார்தோ சிலேயோ ஆகிய மூவரும் விளக்கினர்.

"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் (Euntes in mundum universum): விசுவாசப் பரப்பு பேராயம் தொடங்கப்பட்டதன் 400ஆம் ஆண்டு குறித்த ஓர் உலகளாவிய மாநாடு" என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாட்டில், மறைப்பணியின் நான்கு நூற்றாண்டுகள், மற்றும், நற்செய்தி அறிவிப்பின் நான்கு நூற்றாண்டுகள் என்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டை, நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடத் துறை, வரலாற்று அறிவியல் பாப்பிறை கழகம், உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகம் ஆகிய மூன்றும் இணைந்து நடத்துகின்றன.

17ஆம் நூற்றாண்டிலிருந்து திருத்தந்தையரும், 18ஆம் மற்றும், 19ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பேராயத்தின் சில முக்கிய தலைவர்களும், இப்பேராயத்திற்குத் ஆற்றியுள்ள பணிகள் பற்றி, ஐந்து கண்டங்களின் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 24 சொற்பொழிவார்கள் கவனத்திற்குக் கொணர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, கத்தோலிக்கத் திருஅவையின் உலகளாவியப் பண்பை மீண்டும் உறுதிசெய்வதில் இப்பேராயம் ஆற்றியுள்ள பலனுள்ள சேவைகளும் இம்மாநாட்டில் அனைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம்

1622ஆம் ஆண்டு சனவரி 6ம் தேதி, திருத்தந்தை 15ம் கிரகரி அவர்கள், விசுவாசப் பரப்பு பேராயத்தை  நிறுவினார். பின்னர் அவர் அதே ஆண்டு ஜூன் 22ம் தேதி, Inscrutabili divinae Providentiae arcano என்ற தலைப்பில் வெளியிட்ட திருத்தந்தையின் அறிவிப்பின் வழியாக அதை  அதிகாரப்பூர்வமாக உருவாக்கினார்.

இந்த விசுவாசப் பரப்புப் பேராயம், கடந்த நூற்றாண்டில் கிழக்குமரபு திருஅவைகளுக்கும் உதவியிருப்பதால், 1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், Regimini Ecclesiae Universae என்ற திருத்தூது கொள்கைத் திரட்டின் வழியாக, இதன் பெயரை மக்களின் நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயமாக மாற்றினார். 

2022ஆம் ஆண்டு ஜூன் 5ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Praedicate Evangelium என்ற திருத்தூது கொள்கைத்திரட்டின் வழியாக, இதன் பெயரை நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு புதிய துறை என்று மாற்றினார். (Fides)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2022, 11:53