ஜெர்மன் கத்தோலிக்க ஆயர்களுடன் திருப்பீட அதிகாரிகள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நவம்பர் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை அத் லிமினா என்னும் ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் சந்திப்பிற்காக ஒன்று கூடிய 62 ஜெர்மன் நாட்டுக் கத்தோலிக்க ஆயர்களை சந்தித்து மகிழ்ந்தார் திருத்தந்தை.
திருப்பீட தலைமையகத்தின் சில துறைத்தலைவர்கள், மற்றும் ஜெர்மன் நாட்டு ஆயர்கள் 62 பேர் திருத்தந்தையை சந்தித்ததைத் தொடர்ந்து, உரோமில் உள்ள அகஸ்தினியானும் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இடைநிலைக் கூட்டமானது திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆயர்கள் தங்களுக்குள்ளும் திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல்களான பிற ஆயர்களுக்குள்ளும் ஒற்றுமை, அன்பு மற்றும் பிணைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், பகிர்வு, கருணை, பன்முகத்தன்மையில் ஒற்றுமை, ஒன்றிணைந்த பயணப்பாதை பற்றியும் நினைவு கூர்ந்தார்.
மேலும், அறிமுக உரையாற்றிய லிம்புர்கோ ஆயரும் ஜெர்மன் ஆயர் பேரவையின் தலைவருமான ஆயர் Georg Baetzing அவர்கள், ஜெர்மன் ஆயர் பேரவையின் ஒருங்கிணைந்தப் பாதையின் படைப்புகளை வாசித்து, கடவுளின் மக்களின் வலி துன்பம் போன்றவைகளை உணர்ந்து அவர்களுக்கு செவிசாய்ப்பது பற்றியும் எடுத்துரைத்தார்
மேலும், ஜெர்மன் ஆயர் பேரவையில் விவாதிக்கப்பட்ட தலைப்புக்களான, திருஅவையில் அதிகாரம், அதிகாரப் பகிர்வு, பொதுவான பங்கேற்பு, மறைப்பணி பற்றிய திட்டமிடல், அருள்பணித்துவ வாழ்வு, தலத்திருஅவை அலுவலகங்கள், அலுவலகப் பெண்கள், பாலினம் மற்றும் ஓரினச்சேர்க்கையினர் என அனைவர் பற்றியும் எடுத்துரைத்தார் ஆயர் பேட்ஸிங்.
நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான துறையின் தலைவர் கர்தினால் Luis Francisco Ladaria, மற்றும் ஆயர் துறைத்தலைவரான கர்தினால் Marc Ouellet, ஆகியோர் இறையியல் அறிக்கைகள், முறைமை, உள்ளடக்கங்கள் தொடர்பான கவலைகள் மற்றும் இட ஒதுக்கீடு பற்றி வெளிப்படையாகவும் தெளிவாகவும் ஆயர்களுடன் விவாதித்தனர்.
ஒருங்கிணைந்த பாதையின் முன்மொழிவுகள், திருஅவையின் ஒற்றுமை, மற்றும் அதன் நற்செய்திப்பணியின் நன்மைக்காக, இதுவரை வெளிப்பட்ட கோரிக்கைகள் உலகளாவிய திருஅவையின் ஆயர் பேரவையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவுடன் நிறைவிற்கு வந்த இக்கூட்டத்தில், கர்தினால் பரோலின் அவர்கள், செவிமடுத்தல் மற்றும் உரையாடல் வழியாக திருஅவையின் உலகளாவிய ஆயர் பேரவைக்கு செறிவூட்ட முடியும் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்