அமைதிக்கான அழைப்பு மிக முக்கியமானது – கர்தினால் பரோலின்
மெரினா ராஜ் – வத்திக்கான்
உக்ரைனில் நடக்கும் போர், வறியவர்கள் மீதான கவனத்தை திசைதிருப்பாமல் இருக்கட்டும் எனவும், அலட்சியம், சந்தேகம், போட்டிகள், மற்றும் எதிர்ப்புகள் அதிகரித்து கவலையைத் தரும் சூழலில், அமைதிக்கான அழைப்பு மிக முக்கியமானது என்றும் கூறியுள்ளார் கர்தினால் பியேத்ரோ பரோலின்.
டிசம்பர் 02, வெள்ளிக்கிழமை உரோமில் நடைபெற்ற அனைத்துலக NGO என்னும் அரசு சாரா அமைப்புக்களின் 5வது மன்றக்கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறியுள்ளார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.
போரினால் பல நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், மற்ற மனிதர்களையும் அவர்களின் மாண்பையும் உடன் பிறந்த உறவையும் மதிப்பதில் விருப்பத்துடன் செயல்பட வேண்டும் எனவும், ஏழைகளை கவனித்தல், கருவில் உள்ள குழந்தைகள், முதியோர், மற்றும் புலம்பெயர்ந்தோரின் குரலாகச் செயல்படுதல் போன்றவற்றில் இருந்து நமது கவனத்தைத் திசை திருப்பக் கூடாது என்றும் வலியுறுத்தினார் கர்தினால் பரோலின் .
ஒற்றுமை என்பது விரும்பத்தக்க மதிப்பு மட்டுமல்ல, அனைவருக்கும் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தைப் பரமாரிப்பதற்கான நோக்கத்தின் இன்றியமையாதப் பகுதியாகவும் ஒற்றுமை திகழ்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் பரோலின்.
பொது நன்மைக்கான பணி, மனித உரிமைகளை மேம்படுத்துதல் பற்றி அதிகம் பேசப்படும் இக்கால கட்டத்தில், விருந்தோம்பலின் மதிப்பு மற்றும் அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், புலம்பெயர்ந்தோரை மனிதாபிமானத்துடன் வரவேற்கவும், ஒற்றுமைக்கான முயற்சியை அனுமதிக்கவும், அடிப்படையான உலகளாவிய முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறைகள் தேவை என்றும் வலியுறுத்தினார் கர்தினால் பரோலின்.
கத்தோலிக்கரின் செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்டு தொண்டுகள் பல ஆற்றிவரும் NGOக்களின் 5வது மன்றக்கூட்டத்தில் பங்கேற்றோரை, எப்போதும் நற்செய்திக்கு ஆதரவாகவே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்