உலக துறவியர் நாள் திருப்பலிக்கு கர்தினால் Braz de Aviz தலைமை
மெரினா ராஜ் – வத்திக்கான்
அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்ட துறவியருக்கான உலக நாளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் Braz de Aviz திருப்பலி நிறைவேற்றி சிறப்பிக்க இருக்கின்றார்.
சனவரி 31 முதல் பிப்ரவரி 5 வரை காங்கோ மற்றும் தென் சூடான் நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், இம்முறை உலக துறவியர் நாள் சிறப்புத் திருப்பலியானது திருப்பீடத்தின் துறவியர் பேராயத்தின் தலைவரான கர்தினால் Braz de Aviz அவர்கள் தலைமையில் உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் நடைபெற உள்ளது.
ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணிக்கும் திருநாள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோரின் உலக நாளையொட்டி சிறப்பிக்கப்பட உள்ள இத்திருப்பலியானது, பிப்ரவரி 2ஆம் தேதி உரோம் உள்ளூர் நேரம் 5.45 மணியளவில் செபமாலை மற்றும் மாலை 6.00 மணி திருப்பலியுடன் கொண்டாடப்பட இருக்கின்றது.
இரக்கம் மற்றும் மென்மையின் தொழில்
இச்சிறப்புத் திருப்பலியில் பங்கு கொள்ள அனைத்து இருபால் துறவிகளுக்கும் அப்பேராயத்தின் செயலரான பேராயர், José Rodriguez Carballo அவர்கள், அழைப்பு விடுத்துள்ளார். அச்செய்தியில், உங்கள் கூடாரத்தின் எல்லைகளை விரிவுபடுத்துங்கள், என்ற தலைப்பு, மறைப்பணி நடவடிக்கைகளுக்கு புதிய ஆற்றலைக் கொடுப்பதாகவும், இரக்கம், நெருக்கம் மற்றும் மென்மை போன்ற கடவுள் குணத்திற்குத் திரும்புவதற்கான வாய்ப்பைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வார்த்தைகளில் மற்றும் நட்புறவுகளில் வெளிப்படுத்தப்படும் நமது அர்ப்பண வாழ்வு கடவுளின் இதயத்துடன் நல்லிணக்கத்தை நாம் கொண்டுள்ளோமா என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து மக்களையும் தூண்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Carballo.
உலகின் ஒரு பகுதியில் வாழும் மிகவும் பலவீனமான, அநீதி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒற்றுமை, அமைதி போன்றவற்றை அளித்து எதிர்கால உலகைக் கட்டியெழுப்ப தங்களை அர்ப்பணிப்பதன் வழியாக நற்செய்திக்கு சான்று பகர அழைக்கப்படுகின்றார்கள் என்றும், இதனால் ஒருவரையொருவர் உடன் பிறந்த உணர்வுடன் அடையாளம் கண்டு கொள்ள முயல்கிறார்கள் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Carballo.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்