முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்  

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கிறிஸ்தவ இறையியலின் சிறந்த பிரதிநிதி

திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், மேற்கத்திய கிறிஸ்தவ தத்துவத்தில் ஒரு சிறந்த பின்னணியைக் கொண்டிருந்ததோடு பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான உறவின் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார் : Pallavicini.

செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்

இறைபதம் சேர்ந்துள்ள முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் மனத்தாழ்மையும் கண்ணியமும் நிறைந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இத்தாலிய இஸ்லாமிய மதச் சமூகத்தின் தலைவரான Shaykh Yahya Pallavicini.

நேர்காணல் ஒன்றில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களுக்கு வழங்கியுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள Pallavicini, அவர் ஆழமான சிந்தனைகள் கொண்ட திருத்தந்தையாக இருந்தார் என்றும், அவருடன் நாங்கள் மகிழ்வான மற்றும் சிறப்பான தருணங்களைக் கொண்டிருந்தோம் என்றும் கூறியுள்ளார்.

தான் அவருடன் மேற்கொண்ட சந்திப்புக்கள் அனைத்தும் தூதரக உறவுக்கான சந்திப்புகள் அல்ல, ஆனால், அவை அர்த்தமுள்ள ஆழமான சந்திப்புகள் என்றும்,  கடவுள் மற்றும் இயேசுவைப் பற்றி நான் அவருடன் ஒரு எளிமையான, ஆனால், ஆழமான தனிப்பட்ட உரையாடல் நிகழ்த்தியதை இப்போது நினைவுகூர்கின்றேன் என்றும் கூறியுள்ளார் Pallavicini.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கிறிஸ்தவ இறையியலின் சிறந்த பிரதிநிதியாகத் திகழ்ந்தார் என்றும், மேற்கத்திய கிறிஸ்தவத் தத்துவத்தில் அவர் ஒரு சிறந்த பின்னணியைக் கொண்டிருந்ததோடு பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான உறவின் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார் என்றும், நினைவு கூர்ந்துள்ளார் Pallavicini.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் மற்றும் பதினாறாம் பெனடிக்ட் ஆகியோரின் தலைமுறையில் நாம் வாழ்கின்றோம், இதனைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும், அவருடைய பண்புநலன்கள் சிறப்புடன் மிகவும் தீவிரமான, கடுமையான, ஆழமான மற்றும் கிறிஸ்தவ அடையாளத்தில் கவனம் செலுத்துகின்றன என்று கூறியுள்ள Pallavicini அவர்கள், இவைகள் இறையியலாளர்கள் அல்லது தத்துவ இயலாளர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் கூட பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2023, 14:14