உக்ரைன் மக்களுக்காக பெருந்தன்மையுடன் உதவியவர்களுக்கு நன்றி
மெரினா ராஜ் – வத்திக்கான்
"தாராள மனப்பான்மை நம் இதயங்களை விரிவுபடுத்துகிறது, மேன்மையான வாழ்விற்கு அழைத்துச் செல்கிறது என்ற திருத்தந்தையின் வார்த்தைகளுக்கேற்ப, துன்புறும் உக்ரைன் மக்களுக்காக பெருந்தன்மையான மனதுடன் உதவிய ஒவ்வொருவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார் கர்தினால் Konrad Krajewski.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்களுக்கு வழங்க, குளிரைத் தாங்கும் வெப்ப உடைகளுடனும், மின்னாக்கி (GENERATORS) சாதனங்களுடனும் உக்ரைன் சென்று சமீபத்தில் திரும்பிய திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Krajewski அவர்கள், ஒரு வருட மோதலுக்குப் பின் ஏறக்குறைய 20 இலட்சம் யூரோக்கள் உக்ரைன் நாட்டு மக்களுக்காக நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“நன்றியுணர்வு என்பது கிறிஸ்தவர்களின் தனிச்சிறப்பு. இது கடவுளின் இறையரசின் எளிமையான, உண்மையான அடையாளம், நன்றியுள்ள அன்பின் ஆட்சி என்று 2022ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் நாள் மூவேளை செப உரையின் போது திருத்தந்தை அவர்களால் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள், கர்தினால் Krajewski அவர்களின் செயலிலும் எண்ணங்களிலும் வலுவாக எதிரொலிக்கின்றன.
சில வாரங்களுக்கு முன்பு உக்ரைனில் இருந்து திரும்பிய கர்தினால் Krajewski, சிறிய மற்றும் பெரிய தொகைகளை நம்பிக்கையுடன் நன்கொடையாக வழங்கிய மக்களுக்கு அப்பணத்தை வைத்து நாங்கள் என்ன செய்தோம் என்ன செய்ய இருக்கின்றோம் என்பதை தெரிவிப்பதும் அவர்களுக்கு நன்றி கூறுவதும் மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு இலட்சம் யூரோக்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ஜனவரி தொடக்கத்தில், மக்களின் முயற்சியினால் 3 இலட்சம் யூரோக்களை நன்கொடையாகப் பெற்றுள்ளோம் என்றும், இவை அனைத்தும் துன்புறும் உக்ரேனிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான பொருட்களுக்காக செலவிடப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
தன்னலம் கருதாமல் பணியாற்றும் கர்தினால் Krajewski, கிறிஸ்மஸ் அன்று சமீபத்திய பயணமாக, போலந்து மற்றும் உக்ரேனிய எல்லைகளுக்கு இடையே வெப்ப உடைகள், மற்றும் மின்னாக்கிகளைக் கொண்டு வருவதற்காக அதிக பயணம் மேற்கொண்டவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்